Thunivu: புதுச்சேரி நள்ளிரவு காட்சிக்கு மீண்டும் அனுமதி... கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!
இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் நள்ளிரவு ஒரு மணி சிறப்புக் காட்சியை ரத்து செய்வதாக மாவட்ட கலெக்டர் வல்லவன் முன்னதாக அறிவித்திருந்தார்.
புதுச்சேரியில் 'துணிவு' திரைப்படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சி திரையிட மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள ‘துணிவு’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஜன.11) வெளியாக உள்ளது. மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் காட்சி தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு 1.00 மணிக்குத் தொடங்கும் நிலையில், இந்தப் பொங்கல் சிறப்பான தல பொங்கலாக இருக்கப்போகிறது என அஜித் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் நள்ளிரவு ஒரு மணி சிறப்புக் காட்சியை ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் 'துணிவு' படத்தை திரையிடும் திரையரங்கங்களின் உரிமையாளர்கள் இன்று புதுச்சேரி ஆட்சியரை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதால், அதற்கான பணத்தை திருப்பித் தருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள் ஆவேசத்துடன் ஏதேனும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் கலெக்டரிடம் முறையிட்டனர்.
இதனை பரிசீலித்த கலெக்டர் வல்லவன், புதுச்சேரியில் 'துணிவு' திரைப்படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிக்கை
முன்னதாக நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தியேட்டர் வளாகத்தில் பெரிய பேனர் வைப்பதற்கு, பாலாபிஷேகம் செய்வதற்கும் அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட்டுகளில் இதுதொடர்பாக புகாரளிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ரிலீஸ்
வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் நாளை (ஜனவரி 11) ரிலீசாகவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி வரையிலான காட்சிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. மேலும் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் காட்சிகளை ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சியும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் முதல் காட்சியும் திரையிடப்படுகிறது.