சொந்த கிராமத்தில் வராகியம்மனுக்கு கோயில் கட்டிய யோகிபாபு..!
திருவண்ணாமலை அருகே உள்ள சொந்த கிராமத்தில் காமெடி நடிகர் யோகிபாபு வராகியம்மன் கோவிலைக்கட்டி இன்று கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்
தமிழ் திரையுலகில் பரபரப்பாக இருப்பவர் காமெடி நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகானகவும் கோலமாவு கோகிலா, தர்மபிரபு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதிக அளவில் கடவுள் மீது நம்பிக்கையும் பக்தியும் உடையவர். இவர் சிறந்த காமெடியன் என விருதுகளை பெற்றுள்ளார். ஒருமுறை விருது வழங்கும் விழாவின் மேடையில் அங்குள்ள தொகுப்பாளர்கள் நடிகர் யோகி பாபுவை பார்த்து ”உங்களுடைய கையில், இவ்வளவு சாமி கயிறுகள் கட்டியுள்ளீர்கள், உங்களுக்கு அந்த அளவுக்கு கடவுள் மீது பக்தியா?” என கேட்டனர். அதற்கு பதில் கூறிய யோகி பாபு, ”நான் ஒன்றும் இல்லாமல் சுற்றியபோது எனக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன் என்னை பலபேர் இளக்காரமாக பார்த்து சிரித்தார்கள்.
அப்போது நான் அந்த கடவுள் மீது நம்பிக்கை வைத்தேன் ,என்னை இங்கு நிற்க வைத்துள்ளார், அதுமட்டுமல்லாமல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கடவுள் உள்ளார், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, கடவுள் இல்லை என்று கூறி நான் மிகவும் கடவுள் நம்பிகை உடையவன் எனக்கூறி கையை காட்டினார். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், பட்டு நகரான ஆரணியை அடுத்த பெரணமல்லூர் அருகில் உள்ள வாழைப்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் நகரம் பேர் கிராமத்தை சேர்ந்தவர் யோகிபாபு. இவரது அம்மா தனது மூத்த மகனுடன் கிராமத்தில்தான் வாழ்ந்து வருகிறார். இவரது உடன்பிறந்த அண்ணன் ராஜா, அந்த பகுதியில் குறி சொல்லும் சாமியாராக கிராமத்திலேயே இருந்து வருகிறார்.
சென்னையை சேர்ந்த யோகி பாபுவின் காதலியான மருத்துவர் மஞ்சு பார்வதியை, பிப்ரவரி 5-ஆம் தேதி காலை தனது கிராமத்து நண்பர்கள், குடும்பத்தினர், தன்னுடன் சென்னையில் உள்ள சில நண்பர்கள் முன்னிலையில் குலதெய்வ கோயிலுக்கு சென்று இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
அதனைத்தொடரந்து தற்போது நடிகர் யோகி பாபுவின் சொந்த கிராமத்தில் அவருக்கு சொந்த இடத்தில் அவருடைய குலதெய்வமான வராகி அம்மன் கோவிலை கட்டுவதற்காக, ஒரு முகூர்த்த நாளில் கட்டும் பணியை துவங்கினார். தற்போது கோவில் கட்டும் பணியும் முடிந்துவிட்டது. இன்று (26.08.2021) வராகி அம்மன் கோவிலுக்கு நடிகர் யோகி பாபு காலையில் கும்பாபிஷேகம் நடத்தினார்.
இந்த கும்பாபிஷேகத்திற்கு திரையுலகில் உள்ளவர்கள், உறவினர்கள், அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மட்டுமன்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு வராகி அம்மனை தரிசனம் செய்து சென்றனர். அதுமட்டுமல்ல நடிகர் யோகி பாபுவை காண பல ரசிகர்களும் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.