பிரபாஸின் இரு படங்களை தூக்கி எறிந்த தீபிகா படுகோன்...கல்கி 2 வில் இருந்து விலகியது ஏன்?
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி 2 படத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அறிவித்துள்ளது

பிரபாஸ் நடித்து நாக் அஸ்வின் இயக்கி கடந்த 2023 ஆம் ஆண்டு மிகபிரம்மாண்டமாக வெளியாகியது கல்கி திரைப்படம். அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன் , துல்கர் சல்மான் , விஜய் தேவரகொண்டா , ஷோபனா , கமல்ஹாசன் , திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். புராணக் கதை , சைன்ஸ் ஃபிக்ஷன் கலந்து உருவான கல்கி திரைப்பட உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது மேலும் பிரம்மாண்டமாக கல்கி 2 படத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் தீபிகா படுகோனின் கதாபாத்திரம் பலரை கவர்ந்திருந்தது . தற்போது கல்கி இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்கி இரண்டாம் பாகத்தில் தீபிகா நீக்கம்
கல்கி மாதிரியான ஒரு படம் விடாப்பிடியான உழைப்பை கோரும் படம். பலமுயற்சிகளுக்குப் பின் போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக வைஜயந்தி மூவிஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஸ்பிரிட் படத்தைத் தொடர்ந்து தற்போது பிரபாஸின் இன்னொரு படத்தில் இருந்து தீபிகா அடுத்தடுத்து விலகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
8 மணி நேர கொள்கை
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஹாரர் திரைப்படம் ஸ்பிரிட். இந்த படத்தில் முன்னதாக தீபிகா படுகோன் நாயகியாக நடிக்க இருந்தார். அண்மையில் குழந்தைக்கு தாயான தீபிகா படூகோன் ஒரு நாளில் தன்னால் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும் என நிபந்தனை வைத்துள்ளார். இதில் இயக்குநருக்கு உடன்பாடில்லாததால் அந்த படத்தில் இருந்து விலகினார் தீபிகா . இதற்காக பிரபாஸ் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். மேலுல பல முன்னணி நடிகர்கள் தீபிகா படூகோனின் கோரிக்கை நியாயமானதுதான் என்றும் கூறியுள்ளார்கள். தற்போது கல்கி படத்தில் இருந்து தீபிகா விலகியதற்கும் இந்த 8 மணி வேலை நேர கொள்கை தான் காரணமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பிரபாஸூடன் வலுக்கும் மோதல்?
கல்கி முதல் பாகம் வெளியானது போது வயிற்றில் குழந்தையுடன் அந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் தீபிகா படுகோன். முதல் பாகத்தில் தீபிகா படுகோனின் கதாபாத்திரம் படம் முழுக்க வருவதால் அதில் சிரத்தை எடுத்து நடித்ததாகவும் தற்போது இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய ரோல் இல்லாததால் இப்படத்தில் நடிக்க அவர் அலட்சியம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. ஸ்பிரிட் படத்தில் பிரபாஸூடன் நடிக்க மறுத்துவிட்டதால் கல்கி 2 ஆம் பட வாய்ப்பு பறிக்கப்பட்டதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் தீபிகா
அடுத்தபடியாக அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் படத்தில் நாயகியாக நடிக்கிறார் தீபிகா படுகோன். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய ஆக்ஷன் சாகச படமாக இப்படம் உருவாக இருக்கிறது.





















