ஒரே படத்தில் கமலுக்கு வில்லன்களாக களமிறங்கும் நான்கு ஹீரோஸ்!
“விக்ரம்” படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கமல், பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
உலகநாயகன் என கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் “விக்ரம்”. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அரசியல் ஆர்வத்தில் இருந்த கமல் அதில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு முழு வீச்சில் சினிமாவில் களம் காண தொடங்கிவிட்டார். தற்போது “விக்ரம்” படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கமல், பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தில் கௌதமிக்கு பதில் மீனா ஜோடியாக நடிப்பார் என கூறப்படுகிறது. பாபநாசம் 2 படத்தை முடித்த கையோடு “விக்ரம் “ படத்திற்கான கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாக கமலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது விக்ரம் படத்திற்கான மற்ற நடிகர் , நடிகைகள் தேர்வு, தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் இறங்கியுள்ளது படக்குழு.
இந்நிலையில் படத்தில் வில்லன்களாக நடிகர் விஜய் சேதுபதி, மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஃபகத்பாசில், மாஸ்டர் படத்தின் மூலம் புகழ்பெற்ற அர்ஜூன்தாஸ் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இதில் விஜய் சேதுபதி “மாஸ்டர்” படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதேபோல ஃபகத்பாசில் , சிவகார்த்திகேயன் படமான “வேலைக்காரனில் “ வில்லனாக நடித்திருந்தார். அர்ஜூன் தாஸ் அறிமுகமானதே வில்லனாக இருந்தாலும் அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு ஹீரோவிற்கு இருக்கும் மவுசு இவருக்கும் உள்ளது. இந்நிலையில் படத்தில் கூடுதலாக ஒரு வில்லனை இணைக்க இயக்குநர் தரப்பில் திட்டமிடப்பட்டு வந்த நிலையில், அதற்காக நடிகர் “நரேன்” தேர்வு செய்யப்பட்டுள்ளார். நரேன் ஏற்கனவே “அஞ்சாதே”, “நெஞ்சிருக்கும் வரை “ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதேபோல மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கைதி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விக்ரம் படத்தில் முக்கியமான திருப்புமுனை காட்சி ஒன்றில் நரேன் காட்சிகள் இடம்பெறும் என தெரிகிறது. நடிகர் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனக்கு கனவு என்றும் அது தற்பொழுது நிறைவேற இருப்பதில் தனக்கு மகிழ்ச்சி எனவும் நரேன் தெரிவித்துள்ளார். விகரம் படத்தில் நரேனின் காட்சிகளை எடுப்பதற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் கால்ஷீட் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. நரேன் இதில் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான கெட்டப்பில் வலம் வர உள்ளாராம்.
லோகேஷ் கனகராஜ் கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து வித்தியாசமான ஆக்ஷன் ப்ளாக் படம் ஒன்றை வெளியிட்டார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. இந்நிலையில் நான்கு வில்லன்களுடன், கமல் போன்ற மாஸ் நடிகரை ஹீரோவாக வைத்து உருவாக இருக்கும் “விக்ரம்” படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. அடுத்த ஆண்டு முக்கிய பண்டிகை ஒன்றில் ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் வெளியாக இருப்பதாக படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.