Thalapathy 69: இதுதான் தளபதி 69 லுக்கா? இணையத்தை மிரட்டும் விஜய்யின் நியூ கெட்டப்!
Thalapathy 69: திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், பொங்கல் கொண்டாட்டத்தில் தனது தளபதி 69 லுக்கில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். தனக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார்.
தளபதி 69
அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும், சினிமாவில் இரு:ந்து முழுவதும் விலகுவதாகவும் அறிவித்தார். இதன்படி, அவர் நடிப்பில் கடந்தாண்டு கோட் படம் வெளியானது. தற்போது அவரது கடைசி படமான தளபதி 69 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பூஜைக்குப் பிறகு விஜய்யின் எந்தவொரு லுக், போஸ்டர், படத்தின் அப்டேட் என எதுவுமே வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய் பொங்கல் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தை மிரட்டும் விஜய்யின் லுக்:
நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற இந்த பொங்கல் நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்யின் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த லுக் தளபதி 69 லுக் என்று கூறப்படுகிறது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் காட்சி தருகிறார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, மமைதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பிரபலங்களுடன் பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். விஜய்யின் கடைசி படம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தின் மீது வழக்கத்தை விட அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படம் தெலுங்கின் முன்னணி நடிகரான பாலைய்யா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், படக்குழுவினரும், சினிமாத்துறையினரும் இந்த படம் பகவந்த் கேசரியின் ரீமேக் என்று கூறிவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. பாலைய்யா நடித்த அதே கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் களத்தில் விஜய்:
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு இதுவரை முழுவீச்சி் களத்தில் இறங்கவில்லை. தளபதி 69 படத்தின் காரணமாகவே அவரால் முழு வீச்சில் களமிறங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், அவர் இன்னும் சில தினங்களில் தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட முக்கிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 69 படத்தின் பணிகள் முடிந்த பிறகு விஜய் முழு வீச்சில் மக்களைச் சந்திக்கவும், தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகளும் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.