மனைவியை இழந்து கலங்கி நின்ற கவுண்டமணி... கட்டி அணைத்து ஆறுதல் கூறிய தளபதி விஜய்!
கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு நடிகரும், தவெக தலைவரும் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கவுண்டமணி. இவரது ரைமிங் மற்றும் டைமிங் காமெடி, கவுண்டர் அட்டாக், கலாய்ப்பது என்று எல்லாமே ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். ஹீரோக்களுக்கு நிகரான வேடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் கவுண்டமணி, சத்யராஜ் - கவுண்டமணி மற்றும் கவுண்டமணி - கார்த்திக் காம்போவில் உருவான காமெடி காட்சிகள் இப்போது வரை ரசிகர்களின் ஃபேவரட்டாக உள்ளது.
80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகரான கவுண்டமணி 1964ஆம் ஆண்டு சர்வர் சுந்தரம் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். பாக்யராஜ் தான் கவுண்டமணிக்கு தான் துணை இயக்குனராக பணியாற்றிய 'மூன்று முடிச்சு' படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட கவுண்டமணி, இன்று ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடும் ஒரு காமெடி நட்சத்திரமாக உருவெடுத்தார்.

இந்த நிலையில் தான் கவுண்டமணியின் காதல் மனைவியான சாந்தி இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். கவுண்டமணி மற்றும் சாந்திக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். சாந்தியின் மறைவுக்கு தவெக தலைவரும், நடிகருமான தளபதி விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கவுண்டமணி மற்றும் விஜய் இருவரும் இணைந்து கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர சத்யராஜ், நிழல்கள் ரவி, பாண்டியராஜன், அம்பிகா, சினி ஜெயந்த், கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி, பூச்சி முருகன், சித்ரா லட்சுமணன் ஆகியோர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நாளை காலை 11.30 மணிக்கு பெசன்ட் நகர் பகுதியில் உள்ள மின் மயானத்தில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




















