Thalapathy 67 : விஜயின் அடுத்த படத்தில் கேஜிஎஃப் 2 வில்லன்...வெளியான தளபதி 67 புதிய அப்டேட்..?
விஜய் - லோகேஷ் கூட்டணியில் ஏற்கனவே ஹிட்டான 'மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய அதே நாளில் (அக்டோபர் 3) தளபதி 67 படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தவறிவிட்டது. தற்போது, நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் வெளியீடுக்கு பிறகு விஜயின் 67வது படத்திற்கான பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடங்க உள்ளார். இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்காக உருவாக்கிய கதையைத் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான கதையும் உருவாக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த படம் எடுக்கப்படவில்லை.
தற்போது, அந்த கதையில் நடிகர் விஜயை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. விஜய்யும் வழக்கமான படமாக இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தில் நடிக்கவே விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் நடிகர் விஜயின் 67வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, கேஜிஎஃப்-2 படத்தின் வில்லனும், பிரபல பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் - லோகேஷ் கூட்டணியில் ஏற்கனவே ஹிட்டான 'மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய அதே நாளில் (அக்டோபர் 3) தளபதி 67 படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே இயக்கிய மாநகரம், கைதி ஆகிய படங்களில் பாடல்கள் ஏதுமே இல்லை. மாஸ்டர் படத்தில் மட்டுமே பாடல்கள் இடம்பெற்றிருந்தது. விக்ரம் படத்தையும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பாணியிலே இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விஜய்க்காக அவர் இயக்க உள்ள தளபதி 67 படத்தையும் அவரது பாணியிலே இயக்க இருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்