Thalaivi Release Date: திரையரங்குகளில் வெளியாகும் "தலைவி".. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படம் வரும் செப்டம்பர் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஜெயலலிதா. இவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தபோதே கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கப்போவதாக பல இயக்குனர்களும் அறிவித்தனர்.
தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குனரான விஜய், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்தசாமி நடித்துள்ளார்.
தற்போது தலைவி படத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி தலைவி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் முன்னால் நடக்க, ஜெயலலிதா பின்னால் இருந்து அவரை பார்ப்பது போலவும் உள்ளது. கடற்கரை பின்னணியில் உள்ள இந்த ஸ்டில்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விப்ரி மோஷன் பிக்சர்ஸ் கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், கோதிக் என்டர்டெயின்மென்ட், ஸ்பிரின்ட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியிடப்பட உள்ளது.
எம்.ஜி.ஆரால் அரசியல் வாழ்க்கைக்குள் அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா, ஒரு நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என்று அப்போதைய முன்னணி நடிகர்கள் பலருடனும் தமிழில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தலைவி படத்தில் ஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை விரிவாக கூறப்பட்டுள்ளது என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்ததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ள புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். ஆனால், எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த் சாமியின் தோற்றம் மிகவும் தத்ரூபமாக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை நித்யாமேனனை வைத்து பெண் இயக்குனர் கிருஷ்ணப்பிரியா இயக்குவதாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதற்கான பணிகள் கிடப்பில் உள்ளது. மேலும், கவுதம் வாசுதேவ் மேனன் ரம்யா கிருஷ்ணனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை குயின் என்று வெப்சீரிசாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.