Serial Actress Deepa: தயவு செஞ்சு யாரும் இப்படி செஞ்சிடாதீங்க; நேத்ரனுக்கு என்ன நடந்தது? முதல் முறையாக பேசிய தீபா!
சீரியல் நடிகர் நேத்ரன் மறைவுக்கு பிறகு இப்போது அவரது மனைவி தீபா, முதல் முறையாக தனது கணவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.

நேத்ரன்:
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் சினிமாவில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தவர் தான் நேத்ரன். சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து வந்த நேத்ரன் மருதாணி, பொன்னி, பாக்கியலட்சுமி, பாவம் கணேசன், மன்னன் மகள், ராஜா மகள், மகாலட்சுமி ஆகிய தொடர்களின் மூலமாக அதிகளவில் பிரபலமானார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி நேத்ரன் உயிரிழந்தார்.
சீரியல் நடிகை தீபா நேத்ரன்:
இந்த நிலையில் தான், கணவர் மறைந்து 2 மாதங்களுக்கு பிறகு இப்போது மனைவி தீபா கணவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். தன்னுடைய கணவர் நேத்ரனை போலவே அவரின் மனைவி தீபாவும் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே என்ற தொடரில் ஹீரோவுக்கு அம்மா ரோலில் நடித்து வருகிறார். அதே போன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி என்ற சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நேத்ரனின் மகள்கள் அபிநயா மற்றும் அஞ்சனா:
தீபா மட்டுமின்றி அவரது மூத்த மகள் அபிநயா கனா காணும் காலங்கள் வெப் சீரிஸின் சீசன் 1ல் நடித்திருக்கிறார். நேத்ரன் மற்றும் தீபா தம்பதியினருக்கு 2 மகள்கள். இவர்களின் இரண்டாவது மகள் தான் அஞ்சனா. இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேத்ரன் கடைசி சில மாதங்களாக உடல் எடை குறைந்து மோசமாக காணப்பட்டார். கடைசியாக அவர் 36 கிலோ எடை குறைந்திருந்தார். இந்த நிலையில் தான் நேத்ரனின் மறைவிற்கு பிறகு அவரது மனைவி தீபா கணவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி பேசியிருக்கிறார்.
வயிற்று வலியால் நேர்ந்த விபரீதம்:
அதில் நேத்ரனுக்கு இதயத்தில் கோளாறு இருந்தது. அதற்காக ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அந்த பிரச்சனை சரியானது. இதே போன்று தான் நேத்ரனுக்கு வயிறு வலி பிரச்சனை வந்த போது கூட அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டார். மேலும் அது வாயு பிரச்சனையாக இருக்கும் என்று கருதி அதற்கு மட்டும் மருந்து மாத்திரை எடுத்தார். ஆனால், அந்த வலி சரியாகவில்லை. 4 வருடங்களாக அதனால் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் வலி அதிகமாகவே எங்களது கட்டாயத்திற்காக ஸ்கேன் பரிசோதனைக்கு வந்தார்.
வயிற்று வலியை சாதாரணமாக எடுத்துக்காதீங்க:
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடுத்த ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அப்போது போதுமான வசதி வாய்ப்பு இல்லை. இதனால், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்திருக்கிறார். மேலும், வயிற்றில் ஆபரேஷனும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆபரேஷன் செய்யப்பட்டதில் தையல் பிரிந்து வயிற்றிலிருந்து ஏதோ திரவம் மாதிரி வெளியில் வர ஆரம்பித்துவிட்டது. அவருக்கு வயிற்று வலி பிரச்சனை வந்த போதே, அவர் அதற்காக சிகிச்சை எடுத்து ஸ்கேப்ன் பரிசோதனை செய்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது என்று கண் கலங்கி பேசியிருக்கிறார்.

