Rasi Thangadurai: சினிமா உலகில் தொடரும் சோகம்.. விஜய் சேதுபதி பட எழுத்தாளர் ராசீ.தங்கதுரை காலமானார்..
பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தாவுமான ராசீ. தங்கதுரை உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தாவுமான ராசீ. தங்கதுரை உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் மறைவு செய்தி மிகப்பெரிய சோகத்தை ரசிகர்களிடையே எழுப்பி வருகிறது. அந்த வகையில் பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தாவுமான ராசீ. தங்கதுரை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசீ, தங்கதுரை. பள்ளிப்படிப்பை முடித்த இவர் இலக்கியத்தின் மீதிருந்த ஆர்வத்தால் சிறு வயதில் கவிதை, கதை எழுதுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ள ராசீ. தங்கதுரை தனது பெற்றோர்கள் ராமையா - சீனியம்மாள் மீதிருந்த அன்பால் தங்கதுரை என்ற தன் பெயருக்கு முன்னால் இருவரின் முதல் எழுத்துகளையும் சேர்த்துக் கொண்டார்..
வைகை கரையில் வாழும் மனிதர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு இவர் எழுதிய “பொய்யா குலக்கொடி” நாவல் மிகப்பிரபலானது. தொடர்ந்து கடந்த 218 ஆம் ஆண்டு நடிகர் விஜய்சேதுபதி தயாரித்து லெனின் பாரதி இயக்கிய “மேற்கு தொடர்ச்சி மலை” படத்துக்கு ராசீ. தங்கதுரை வசனம் எழுதியிருந்தார். இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
அதன்பின்னர் விருதுகளை வென்ற “தேன்” படத்திற்கும் அவர் வசனம் எழுதியதோடு மட்டுமல்லாமல் அப்படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றிலும் நடித்திருந்தார். இப்படம் அதிக கவனம் பெற்ற படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து கெவி, தாக்கல், ஆதாரம் ஆகிய படங்களில் வசனம் எழுதிய ராசீ. தங்கதுரை மேலும் 4 பெயரிடப்படாத படங்களில் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
இப்படியான நிலையில் இதய பாதிப்பு காரணமாக அவர் இன்று காலமானார். உடல்நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ராசீ.தங்கதுரை ஆண்டிப்பட்டியில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ராசீ.பிரியன், சுகதேவ் திலீபன் என்ற மகன்களும் உள்ளனர்.
ராசீ. தங்கதுரை இறுதிச்சடங்கு ஆண்டிபட்டி கதிர்நரசிங்காபுரம் கிராமத்தில் இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

