Actor Bonda Mani: திரையுலகில் தொடரும் சோகம்.. பிரபல காமெடி நடிகர் போண்டா மணி காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி
1991 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் போண்டா மணி
திரைப்படங்களின் காமெடி காட்சிகளில் தனது தனித்துவமான நடிப்பால் மிகப் பிரபலமான துணை நடிகராக வலம் வந்த போண்டா மணி (வயது 60) உடல் நலக்குறைவால் காலமானார்.
அகதியாக தமிழ்நாட்டு வந்தவர்
இலங்கையை பூர்விகமாகக் கொண்டு தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்தவர் போண்டா மணி. இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் 1994 ஆம் ஆண்டில் வெளியான தென்றல் வரும் தெரு படம் தான் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் காமெடி காட்சிகள் மூலம் மக்களிடத்தில் வரவேற்பை பெற்றார்.
குறிப்பாக கவுண்டமணி, வடிவேலு, விவேக்கின் காமெடி காட்சிகளில் துணை நடிகராக அசத்தியிருப்பார். நான் பெத்த மகனே, சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, ஆயுதம், வின்னர், படிக்காதவன், மருதமலை. வேலாயுதம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் போண்டா மணி நடித்துள்ளார்.
சிறுநீரக செயலிழப்பால் அவதி
இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் தவித்த போண்டா மணியின் உடல் நிலை பற்றி நடிகர் பெஞ்சமின் அழுதுக் கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேபோல் நடிகர் வடிவேலுவும் தன்னால் இயன்ற உதவியை செய்வதாக தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி, ரூ.1 லட்சம் அளித்தார். நடிகர் தனுஷ் தொடங்கி திரையுலக பிரபலங்கள் போண்டா மணிக்கு உதவினர். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்த போண்டா மணியை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பெஞ்சமின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல் பண உதவி செய்தனர்.
மேலும் போண்டா மணி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உதவுவது போல நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராஜேஷ் ப்ரீத்திவ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இப்படியான நிலையில் கடந்த ஓராண்டு காலமாகவே கிட்னி செயலிழப்பு காரணமாக வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்று வந்தார். அதேசமயம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய சரியான பணமும், உறுப்பு தானமும் கிடைக்கவில்லை.
போண்டா மணி மரணம்
இந்நிலையில் போண்டா மணி, நேற்றிரவு 11 மணியளவில் உயிரிழந்தார். பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூரில் இருக்கும் அவருடைய வீட்டில் இருக்கும் போது போண்டா மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக, போண்டா மணியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போண்டா மணி உடல் அவரது வீட்டில் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த போண்டா மணிக்கு மாதவி என்ற மனைவியும், சாய் குமாரி என்ற மகளும், சாய் என்ற மகனும் உள்ளனர். மகள் கல்லூரியிலும், மகன் பள்ளியிலும் பயின்று வருகிறார்கள். நகைச்சுவை நடிகர் போண்டா மணி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.