Maanaadu | மாநாடு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்த டி.ராஜேந்தர்.!! எல்லாம் பழைய பிரச்னை!!
மாநாடு விவகாரத்தில், சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் டி ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
முன்னதாக, மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் படம் வெளியான முன் தினம் மாலை மாநாடு படம் மீண்டும் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டது.படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமை விற்பனையில் சிக்கல் ஏற்பட்டதே படம் வெளியிடப்படாததிற்கு காரணம் என சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்ட நிலையில், படம் வெளியானது. தற்போது படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “ படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்படாமல் இருந்த நிலையில், டி.ராஜேந்தர் ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அந்த தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி, அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது. தற்போது திரையரங்குகளில் படம் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விற்க முயற்சி செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வழக்கு வரும் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.