Sushmita Sen: 95 சதவீத அடைப்பு.. மிகப்பெரிய மாரடைப்பு... உயிர்பிழைத்தது எப்படி? சுஷ்மிதா சென்
”நான் மிகப்பெரிய மாரடைப்பிலிருந்து உயிர் பிழைத்துள்ளேன். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடித்ததால் நான் உயிர் பிழைத்துள்ளேன்” - சுஷ்மிதா சென்
நடிகை சுஷ்மிதா சென்னுக்கு 5 நாள்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 95 சதவீதம் அடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சுஷ்மிதாசென்னுக்கு மாரடைப்பு:
பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றவரும், ரட்சகன் படத்தில் நடித்தவருமான நடிகை சுஷ்மிதா சென், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்று முன் தினம் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மாடலிங் துறையில் இளம் வயதிலேயே நுழைந்த சுஷ்மிதா, 1994ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதுடன், ’தஸ்டக்’ எனும் படம் மூலம் 1996ஆம் ஆண்டு பாலிவுட்டில் நுழைந்தார். தற்போது 47 வயதாகும் சுஷ்மிதா சென் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவில் கோலோச்சி வருகிறார்.
இந்நிலையில், சுஷ்மிதாவின் இந்தப் பதிவு அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் வட்டாரத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சுஷ்மிதா விரைவில் நலம் பெற வேண்டி சமூக வலைதளங்கள் முழுவதும் அவரது ரசிகர்கள் வேண்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து ட்ரெண்ட் செய்தனர்.
பெரிய இதயம்:
உங்கள் இருதயத்தை மகிழ்ச்சியாகவும் தைரியமானதாகவும் வைத்துக் கொண்டால் உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அது உதவும். இது என் தந்தை என்னிடம் கூறிய முதிர்ச்சியான வார்த்தைகள். 2 நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்ட சூழலில், ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதயத்தில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டது. முக்கியமான விஷயம், எனக்கு பெரிய இதயம் உள்ளது’ என்பதை என் இருதய நிபுணர் உறுதிப்படுத்தியுள்ளார். நான் மீண்டும் வாழத் தயாராக இருக்கிறேன்” என தன் இன்ஸ்டா பக்கத்தில் சுஷ்மிதா பகிர்ந்திருந்தார். இந்நிலையில் சுஷ்மிதாவுக்கு அவரது ரசிகர்கள் கடந்த சில நாள்களாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
95 சதவீதம் அடைப்பு:
எனக்கு மாரடைப்பு வந்தது பற்றி இங்கே பகிர்ந்தபோது அன்பை என் மீது கொட்டினீர்கள். இதற்காக நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நான் மிகப்பெரிய மாரடைப்பிலிருந்து உயிர் பிழைத்துள்ளேன். இருதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயில் 95 % அடைப்பு ஏற்பட்டது. சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடித்ததால் நான் உயிர் பிழைத்தேன்.
இதுவும் வாழ்வின் ஒரு கட்டம் தான். இதனைக் கடந்துவிட்டேன்” என சுஷ்மிதா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுஷ்மிதாவின் இந்தப் பேச்சு மீண்டும் இணையத்தில் கவனமீர்த்து வைரலாகி வருகிறது. சென்ற ஆண்டு சுஷ்மிதா சென், முன்னாள் ஐபிஎல் சேர்மேன் லலித் மோடியை டேட் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதனை லலித் மோடி தனி சமூக வலைதள ப் பக்கத்தில் ஃபோட்டோக்கள் பகிர்ந்து உறுதி செய்த நிலையில், சுஷ்மிதாவும் லலித் மோடியும் கூடிய விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சுஷ்மிதா 2 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார்.