Retro OTT: தியேட்டரில் வாஷ் அவுட்! சத்தமில்லாமல் ஓடிடிக்கு பார்சலான சூர்யாவின் 'ரெட்ரோ'! எப்போது ரிலீஸ்!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இப்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் கடைசியாக வெளியான 'கங்குவா' படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், 'கங்குவாவின்' தோல்வி நடிகர் சூர்யாவையே அசைத்து பார்த்தது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சூர்யா பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.
'கங்குவா' கைவிட்ட போதிலும், 'ரெட்ரோ' படம் எதிர்பார்ப்பை தூண்டியது. காரணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, முதல் முறையாக இந்த படத்தில் நடித்திருந்தார். அதே போல் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். கடந்த மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆனது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்த இந்தப் படம், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் கூட வசூலில் ஓரளவு ரீச் கொடுத்தது. இந்திய அளவில் ரூ.60 கோடி வரையில் வசூலை குவித்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் உலகளவில் ரூ.100 கோடி வசூல் எட்டியது.
இந்த நிலையில் தான் இந்தப் படம் வெளியாகி 14 நாட்கள் கடந்த நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக திரைக்கு வரும் படங்கள் ஒரு மாத இடைவெளியில் தான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய்யப்படும். அப்படி மே 1ஆம் தேதி திரைக்கு வந்த ரெட்ரோ, இந்த மாத இறுதிக்குள்ளாக ஓடிடிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'ரெட்ரோ' படத்தின் டிஜிட்டல் உரிமையை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு சூர்யா தனது 45ஆவது படமான சூர்யா45 படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும், ஆர்ஜே பாலாஜி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ஆன்மீக கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு, 'பேட்டைக்காரன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





















