Rajalakshmi: அடிப்படை அறிவு இல்லாதவங்க: சுய ஒழுக்கம் எனக்கு இருக்கு: மோசமான கமெண்ட்களுக்கு ராஜலக்ஷ்மி பதிலடி!
Rajalakshmi: ஆங்கிலம் பேசுவது பற்றியும் அவரின் உடை பற்றியும் மோசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு தகுந்த பதிலடியை கொடுத்துள்ளார் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலக்ஷ்மி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஏராளமான பாடகர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றும் ஒரு அற்புதமான மேடையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாட்டுப்புறப் பாடகர்களான செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதி சூப்பர் சிங்கர் சீசன் 6இல் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்கள். அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பப்ளிசிட்டியால் ஏராளமான திரைப்படங்களில் பாடி வருகிறார்கள்.
பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின்' திரைப்படத்தில் ராஜலக்ஷ்மி பாடிய சின்ன மச்சான்... என்ற பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற ஐயா சாமி... பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ட்ரெண்டிங் பாடலைப் பாடிய ராஜலக்ஷ்மிக்கு ஏராளமான வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மட்டுமின்றி சர்வதேச அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உலக அளவில் பிரபலமடைந்தும் வருகிறார்கள். ஒரு பாடகியாக மட்டுமின்றி ஒரு நடிகையாகவும் களம் இறங்கியுள்ளார் ராஜலக்ஷ்மி. 'லைசென்ஸ்' என்ற திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.
செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதி யூடியூப் சேனல் ஒன்றையும் தற்போது நடத்தி வருகிறார்கள். அந்த சேனலில் ஏராளமான வீடியோக்களை போஸ்ட் செய்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் அமெரிக்கா சென்று இருந்தபோது அங்கே இளைஞர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்து இருந்தனர். அதில் ராஜலக்ஷ்மி பேண்ட் ஷர்ட் அணிந்திருந்ததை வைத்து பலரும் அவரின் உடையை விமர்சித்து வந்தனர். என்றுமே புடவையில் தோன்றும் ராஜலக்ஷ்மியை, பேண்ட் சர்ட்டில் பார்த்ததால் நெட்டிசன்கள் பலரும் அவரைக் கலாய்த்து கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் ராஜலக்ஷ்மி.
"ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதை நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். நமக்குள்ளே பேசிக்கொண்டால் நம்முடைய தவறு தெரியாது. பொது இடங்களில் மற்றவர்களுடன் பேசிப் பழகினால் தான் நம்முடைய தவறு என்ன என்பது தெரியும். அதனால் தான் நான் அந்த வீடியோவில் அப்படிப் பேசி இருந்தேன். அதற்கு பலர் மோசமாக கமெண்ட் செய்திருந்தனர். அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி எல்லாம் பேசுவார்கள்" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவரின் உடை குறித்து மோசமான கமெண்ட்களை பதிவிட்டவர்களுக்கு பதிலடியாக "எந்த உடை அணிய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். எது எனக்கு சரின்னு படுதோ அதை நான் போடுறேன். சுய ஒழுக்கம் என்பது எனக்கு இருக்கிறது. எனவே அதை நான் கடைபிடிப்பேன்" என கூறிய ராஜலக்ஷ்மி அந்த உடையில் எடுத்த பல புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.