Siddharth: அவங்க மன்னிப்பு வேண்டாம்.. என் வயிற்றில் எட்டி உதைக்க நினைச்சா தட்டிக் கேட்பேன்.. சித்தார்த் பளிச்!
Siddharth: “நான் காவிரி விவகாரம் குறித்தோ, அரசியல் சார்ந்த விஷயங்களை பேசவோ வரவில்லை. மிகவம் கஷ்டப்பட்டு எடுத்த என்னுடைய படம் தான் எனக்கு முக்கியம். அதை மக்களிடையே கொண்டு சேர்க்க தான் போராடுகிறேன்”

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் "சித்தா". மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தை சொல்லும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 28ம் தேதி சந்திரமுகி 2, இறைவன் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வெளியானாலும் மிகவும் தெளிவான மென்மையான கதையைக் கொண்ட சித்தா திரைப்படம் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மன்னிப்பு கேட்ட நடிகர்கள்:
சித்தா படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக நடிகர் சித்தார்த் கர்நாடகாவுக்கு சென்ற போது கன்னட அமைப்பு ஒன்று சித்தார்த்தை பிரஸ் மீட் நடத்த விடாமல் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்ப வைத்தனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், கன்னட நடிகர்களான நடிகர் சிவராஜ் குமார் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிகர் சித்தார்த்திடம் இந்த அத்துமீறிய செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளனர்.
ஷாக் கொடுத்த சித்தார்த் :
வெற்றி நடைபோடும் சித்தா படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பேசிய நடிகர் சித்தார்த் நடிகர் சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.
“அவர்கள் இருவரும் மிகப் பெரிய நடிகர்கள். யாரோ ஒரு 10 பேர் அடங்கிய அமைப்பு செய்த தவறுக்கு அவர்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு அவசியமும் இல்லை. அவர்களுக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. எனவே அவர்களின் மன்னிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கன்னட ரசிகர்கள் என்னுடைய படத்திற்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். அதே போல கன்னட சினிமா துறைக்கும் இந்தப் பிரச்சினைக்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை. மிரட்டினவங்க கூட தான் பிரச்சினை என்று பேசி இருந்தார்.
உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் :
சித்தா படம் எங்கள் படக்குழுவினரின் இரண்டு ஆண்டு உழைப்பு. எங்களுடைய கடுமையான உழைப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து அங்கீகரித்துள்ளனர். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றிகரமாக முதல் வாரத்தை முடித்து இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறோம்.
நான் காவிரி விவகாரம் குறித்தோ அல்லது அரசியல் சார்ந்த விஷயங்களை பேசவோ வரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த என்னுடைய படம் தான் எனக்கு முக்கியம். அதை மக்களிடையே கொண்டு சேர்க்க தான் நான் போராடுகிறேன். என்னுடைய வயிற்றில் யாராவது எட்டி உதைக்க நினைத்தால் அதைத் தட்டி கேட்பேன்.
இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் அமைதியாக ஒதுங்கிவிட்டது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளரான என்னை சங்கத்தைச் சேர்ந்த யாரும் அழைத்து இது குறித்து எதுவும் கேட்கவும் இல்லை பேசவும் இல்லை. இது போல நாளை வேறு ஒரு தயாரிப்பாளருக்கு நடக்க கூடாது என்பதற்காக தான் நான் போராடுகிறேன்” எனப் பேசியுள்ளார் நடிகர் சித்தார்த்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

