Sid Sriram: சித் என்னும் அரக்கன்; வரிகளில் வலிகளை கடத்தியவன்!
சித் ஸ்ரீராமின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பல்வேறு விதமாக பலரும் வாழ்த்தி வருகின்றனர். அப்படி தான் வாழ்த்தியிருக்கிறார் ஊடகவியலாளரான பொன் விமலா. இதோ அவருடைய வித்தியாசமான வாழ்த்துப் பதிவு.
என்னைப் பொறுத்தவரை சித் எனக்கு பாத்ரூம் சிங்கர்தான். இசைக்கு நேர காலமோ காரண காரியங்களோ தேவையில்லை தான். ஆனால் பயணிக்கவும் உறங்கவும் எஸ்பிபியையும் ஜேசுதாஸையும் இழுத்துக்கொண்டு போவதுபோல், உடற்பயிற்சி காலங்களில் பென்னிதயாளை அழைப்பதுபோல், காதல் கனவுகளில் பிரதீப்போடு குடும்பம் நடத்துவதுபோல், இன்னபிற நேரங்களில் உன்னியோடும் ஜீவியோடும் உறவாடுவது போல்,குளியல் நேரங்கள் என் சித்துவுக்கு சமர்மணம். அதனால் தான் சித்து எனக்கு மட்டும் பாத்ரூம் சிங்கர்!
சித் ஸ்ரீராம் பாடிய பாடல்களில் எவையெல்லாம் பிடிக்குமென பட்டியல் போடவே முடியாது. பிடிக்காதென்றால் ஒன்றே ஒன்று தான். அதுவும் கூட ஓவரேட்டட் செய்ததாலா அல்லது திரையிசைக்குப் பொருந்தாத தொணியா என்றெல்லாம் பகுத்தாய்ந்து சொல்லத் தெரியவில்லை. ஒன்று தான். அது மறுவார்த்தை பேசாதே!
மற்றபடி, எல்லாமே லவ் யூக்கள் வாங்கும் தரமான செய்கைகள். வரிசைப்படுத்தாமல் எனக்கு மிகப் பிடித்த ஐந்து பாடல்களைச் சொல்கிறேன்.
1.என்னடி மாயாவி நீ! - வடசென்னை
அந்த ஹேய்... ஒன்னும் போதும். கேட்டவளை மாயாவியாக்கும் மாயக்குரல்.
2.ஒத்த உசுரு உன்னால - ஒத்த செருப்பு
குளிருதா புள்ளன்னு கேட்கிற இதமே ஆயிரம் அணைப்புக்கு அட்சாரம்.
3. நீங்க முடியுமா- சைக்கோ
உயிர் போகும் நாள் வரை உனை தேடுவேன்னு உருகும் போதெல்லாம் உயிர் உறைந்து உருகி பின் உறைதல் நிகழும்.
4. லேசா வலிச்சுதா - ஜாஸ்மின்
லேசா வலிச்சுதா கணநேரம்னு ஒவ்வொரு பார்ட்ஸ் ஆஃப் தி பாடிக்கும் கிறங்கிக் கிறங்கிக் கேட்குறப்போ அய்யோ டேய்ய்ய்ய்...யார்டா நீயின்னு மனசளவிலாச்சும் ஹக் பண்ணத் தோணலைனா பெண்ணாய்ப் பிறந்ததே வேஸ்ட் தோழி ரகம் தான்.
5. கதைப்போமா - ஓ மை கடவுளே
ஒன்றாக நீயும் நானும்னு பயணிக்கிற காதல் எல்லாம் வாய்த்தல் வரம். அதெல்லாம் எங்களைப் போன்ற சிங்கிள்ஸ்க்கு மட்டுமே புரியும்.
தமிழ் தாண்டி வேறு மொழிகளிலும் பட்டியல் போட முடியாத குரலோவியம் வரைந்தவன் சித். இதுதான் என்று வரையறை இல்லை. ஒரு நாளாகினும் அவன் தொண்டைக்குழிக்குள் குடியிருக்க ஆசைதான். ப்ச்!
சொல்ல மறந்துவிட்டேன். கபசுரக் குடிநீர் குடித்தாலும் கொஞ்சம் சித்துவோடு சேர்ந்துக் குடித்தால் இனிக்கத் தான் செய்கிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் என் குரல் அரக்கனே!
-பொன் விமலா
இதுபோல் பலரும் தங்களுக்கே உரிய வகையில் தங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை சித்திற்கு தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் மிக குறுகிய காலத்தில், இத்தனை பேர் இதயத்தில் இடம் பெறுவதெல்லாம் வெகு சிலராலேயே முடியும். அந்த வகையில் சித் ஸ்ரீராம் கொடுத்து வைத்தவர் தான். உலக தமிழர்களை தன் வசமாக்கியுள்ளார்.