Shah Rukh Khan | உங்களோடு உடன் நிற்கிறோம்... ஷாருக்கான் வீட்டின் முன்பு ஃப்ளக்ஸ் வைத்த ரசிகர்கள்
“உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ரசிகர்களான நாங்கள் உங்களை ஆழமாகவும், நிபந்தனையற்றும் நேசிக்கிறோம். இதுபோன்ற சோதனைக் காலங்களில் உங்களோடு நிற்கிறோம்" என பதிவிடப்பட்டுள்ளனர்.
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் கைதுக்குப் பிறகு அவருக்கு அவருடைய ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஷாருக்கானின் மும்பை இல்லமான மன்னத்தின் முன்பு ஃப்ளக்ஸ் போர்டை வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் திரைப்பட நடிகரின் மகன் உட்பட ஏழு பேர் மும்பையின் நட்சத்திரக் கப்பல் கொண்டாட்டம் ஒன்றில் போதைப்பொருள் உபயோகிக்கும்போது பிடிபட்ட தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 13 கிராம் கொக்கைய்ன், 21 கிராம் சராஸ், 5 கிராம் எம்டி, 22 எம்டிஎம்ஏ மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் தடுப்புப்பிரிவும் கடலோரக் காவல்படையும் இணைந்து நடத்திய இந்த பெரும் தேடுதல் வேட்டையில் ஆர்யன் கான் பிடிபட்டார். சொகுசுக்கப்பல் கொண்டாட்டம் ஒன்றில் போதைப்பொருள் உபயோகிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து கப்பலுக்குள் மஃப்டியில் நுழைந்த போலீசாரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் போதைப்பொருள் உபயோகிக்கும் கும்பலை கையும் களவுமாகப் பிடித்தனர்.
ஆர்யன் கானிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் அவர் கடந்த 4 வருடங்களாக போதைப்பொருள் எடுத்துவருவதாகவும் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணையின் போது அவர் தொடர்ச்சியாக அழுததாகவும் கூறப்படுகிறது. விசாரணையை அடுத்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஆர்யன் கான். வருகின்ற 11 அக்டோபர் வரை அவரை சிறையில் விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது.
இந்நிலையில் தன்னுடைய படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மும்பைக்கு திரும்பியுள்ளார் ஷாருக்கான்.
இந்த சம்பவங்களால் ஷாருக்கானின் குடும்பம் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த அவரது ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஷாருக்கானின் மும்பை இல்லமான மன்னத்தின் முன்பு ஃப்ளக்ஸ் போர்டை வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதில், “உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ரசிகர்களான நாங்கள் உங்களை ஆழமாகவும், நிபந்தனையற்றும் நேசிக்கிறோம். இதுபோன்ற சோதனைக் காலங்களில் உங்களோடு நிற்கிறோம். பத்திரமாக இருங்கள் ராஜா!” என நெகிழ்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது.அந்த புகைப்படம் ஷாருக்கானின் உலகளாவிய ஃபேன்ஸ் க்ளப் டிவிட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. ஷாருக் கானின் ரசிகர்கள் பலரும், "we are with you Aryan khan" என கமெண்ட் செய்து வருகின்றனர்.
We Love You King and We Stand With You ❤️ pic.twitter.com/SE6r9PpTMg
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) October 5, 2021