Sayaji Shinde: சீக்கிரமா வருவேன்.. மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட சாயாஜி ஷிண்டே
கடுமையான நெஞ்சுவலி காரணமாக சாயாஜி ஷிண்டேவை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தபோது மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் இரத்த நாளங்களில் 3 இடங்களில் 99 சதவிகிதம் அடைப்பு இருப்பது தெரிய வந்தது.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் சாயாஜி ஷிண்டே வீடியோ வெளியிட்டு தன் உடல் நலன் பற்றி பேசியுள்ளார்.
View this post on Instagram
மராத்தி பட உலகில் மிகவும் பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். தமிழில் பாரதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், பூவெல்லாம் உன் வாசன், அழகி, பாபா, வேலாயுதம், வேட்டைக்காரன், அழகிய தமிழ் மகன், வெடி, தூள், சந்தோஷ் சுப்பிரமணியம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாயாஜி ஷிண்டே, சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான கில்லர் சூப் வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. அதுமட்டுமல்லாமல் சாயாஜி ஷிண்டே விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
கடுமையான நெஞ்சுவலி காரணமாக அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தபோது மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் இரத்த நாளங்களில் 3 இடங்களில் 99 சதவிகிதம் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்ட சாயாஜி ஷிண்டே, “அனைவருக்கும் வணக்கம். நான் மிகவும் நலமாக இருக்கிறேன். என்னை நேசிக்கும் ரசிகர்கள், நலம் விரும்பிகல் என்னுடன் இருக்கும் நேரத்தில் கவலைப்பட எதுவுமில்லை. விரைவில் உங்களை மகிழ்விக்க திரையில் தோன்றுவேன்” என தெரிவித்தார்.
அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ள போதிலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சாயாஜி ஷிண்டே உள்ளார். அவர் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக அவர் உடல் நலம் பெற வேண்டி சமூக வலைத்தளங்களில் பலரும் பிரார்த்தனை பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: TVK Vijay:“சமூக நீதி, சமத்துவம், சம உரிமை” - அம்பேத்கர் பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்த விஜய்!