கணவர் சரத்குமாரை அறிமுகம் செய்யும் மனைவி ராதிகா!
முன்னதாக “Birds Of Prey–The Hunt Begins” என்ற வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் நடிகை ராதிகா. அந்த சீரிஸ்தான் தற்போது இரை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஒடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸுக்கான மவுசு சில நாட்களாக அதிகரித்துள்ளது. பல முன்னணி நடிகர்களும் கூட வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த பட்டியலில் தற்போது நடிகர் சரத்குமாரும் இணைந்துள்ளார். பிரபல ஒடிடி தளத்திற்காக உருவாகும் ’இரை’ என்ற தொடரில் நடிக்க நடிகர் சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூங்காவனம், கடாரம் கொண்டான்” போன்ற திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் M செல்வா இந்த சீரிஸை இயக்க உள்ளார். படத்தை சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகாவிற்கு சொந்தமான ராடான் மீடியா தயாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு சரத்குமாரின் பிறந்த நாளில் “Birds Of Prey–The Hunt Begins” என்ற வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் நடிகை ராதிகா. அந்த சீரிஸ்தான் தற்போது இரை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கிரைம் சஸ்பன்ஸ் த்ரில்லராக உருவாகும் இரை படத்தின் தொடக்க பூஜை நேற்று நடைபெற்றது.முதற்கட்ட படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளனர். அரசின் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு , கொரோனா பரிசோதனை செய்து கிட்டத்தட்ட 75 துணை நடிகர்கள் இரை படப்பிடிப்பில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. தனது கணவர் , சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடான் மூலம் டிஜிட்டல் உலகில் பயணத்தை தொடங்கியிருப்பது குறித்து குஷியாக உள்ளாராம் ராதிகா.
சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படும் சரத்குமார் 90 களில் கொடிக்கட்டி பறந்த கதாநாயகன். புதுப்புது நடிகர்களின் வருகைக்கு பிறகு தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெப்சீரிஸில் மாஸாக களமிறங்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. தற்போது உருவாக இருக்கும் இரை தொடருக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்,யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் நடிகைகள் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருவதால் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நெடுந்தொடர் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக வெப் சீரிஸில் கால் பதிக்க தொடங்கியுள்ளது.
சமீப காலமாகவே இயக்குநர்களும் சரி , நடிகர்களும் சரி வெப் தொடரில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஏனெனில் கொரோனா ஊரடங்கு காலத்தில் , மக்கள் மத்தியில் வெப் தொடர்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. வரும் காலக்கட்டத்தில் திரையரங்குகளிலும் கூட வெப் தொடர்களை வெளியிடும் சூழல் ஏற்படலாம். அந்த அளவுக்கு மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்காகிவிட்டது வெப் சீரிஸ். சமீபத்தில் வெளியான பேமிலிமேன் தொடரிலும் கூட முன்னணி நடிகையான சமந்தா நடித்திருந்தார். அதேபோல பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமௌளியும் கூட சிவகாமி தேவியின் வாழ்க்கை வரலாற்றினை வெப் சீரிஸாக வெளியிடும் முனைப்பில் உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ எங்களுக்கு தரமான படைப்புகளை கொடுத்தால் மட்டும் போதும் என்பதே ரசிகர்கள் பலரின் எண்ணமாக உள்ளது.