Santhosh Narayanan: சென்னையில் இரவில் போதைப்பொருள் புழங்கும் இடம்.. சந்தோஷ் நாராயணன் போட்ட பதிவு
திருத்தணி அருகே பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணித்த 4 சிறுவர்கள், வடமாநில இளைஞர் ஒருவரை தாக்கினர். அவரை ரயிலில் இருந்து இறங்க சொல்லி அருகில் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.

திருவள்ளூர் அருகே ரயிலில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
திருத்தணி அருகே பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணித்த 4 சிறுவர்கள், வடமாநில இளைஞர் ஒருவரை தாக்கினர். அவரை வேண்டுமென்று ரயிலில் இருந்து இறங்க சொல்லி அருகில் இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து 4 சிறுவர்களையும் கைது செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு திரைத்துறை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாரி செல்வராஜ் பதிவு
இதுதொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவில், “சென்னை மின்சார இரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் விரக்தி
இதேபோல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவில், “சென்னையில் கடந்த பத்தாண்டுகளாக நான் வசித்து வருகிறேன், குறிப்பாக இரவில் போதைப்பொருள் அதிகமாக இருக்கும், அதனைப் பயன்படுத்தும் குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள் நிறைந்த ஒரு பகுதி அதுவாகும். அவர்களால் சமீபத்தில் பல முறை எனது ஸ்டுடியோ தளத்தில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள் தாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் காவல்துறையினர் மீது எல்லை மீறி கல்லெறிந்தனர். ஆனால் அப்போது எந்த வலியும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.
மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலோர் பெருமைமிக்க இனவெறி பிடித்தவர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை வெறுப்பு/தாக்குதல் நடத்துபவர்கள். பல உள்ளூர் அரசியல் பிரிவுகளும் பல 'சாதி' அடிப்படையிலான குழுக்களும் இந்த இளம் சிறுவர்களை பெரும்பாலும் ஆதரிக்க ஓடி வருகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த சம்பவங்களின் யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு, இன்னும் யதார்த்தமாக செயல்பட்டு, பல பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியுமா?
திரையில் மகிமைப்படுத்தப்பட்ட வன்முறைக்கும் சமீபத்தியது போன்ற உண்மையான சம்பவங்களுக்கும் இடையிலான கோடுகள் உண்மையில் மங்கலாகத் தொடங்கியுள்ளன, மேலும் நான் உட்பட நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது” என தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி நிஷா
அதேபோல் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட பதிவில், “நம்மில் நிறைய பேர் வெளிமாநிலத்தில், வெளிநாடுகளில் வேலைப் பார்க்கிறார்கள். பிழைப்புக்காக உழைப்பை மட்டும் நம்பி எத்தனையோ பேர் வெளியில் வேலைப் பார்க்கிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏதாவது தவறு நடந்தால் அதனை தட்டிக் கேட்பதற்கு எங்கிருந்தாலும் அந்த இடத்தை நோக்கி உறவினர்கள் தொடங்கி நண்பர்கள் வரை சென்று விடுவோம். அப்படியாகத் தான் தமிழ்நாட்டில் நிறைய பேர் வெளியிடங்களில் வந்து பணியாற்றுகிறார்கள்.
நாம் தமிழர்களை மட்டுமல்லாமல் சுற்றியிருப்பவர்களுக்கு ஏதாவது நடந்தால் கேட்க தயங்க மாட்டோம். ஆனால் திருவள்ளூரில் நடந்த சம்பவம் ரொம்ப கவலையளிக்கிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு வயதை கருத்தில் கொள்ளாமல் செய்த தவறை மட்டும் கருத்தில் கொண்டு தண்டனை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.





















