Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
Best Selling Car 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2025ம் ஆண்டில் விற்பனையில் அசத்தி, மாருதியின் செடான் கார் மாடல் முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ளது.

Best Selling Car 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2025ம் ஆண்டில் விற்பனையில் அசத்தி, முதலிடம் பிடித்த காரின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சரித்திரம் படைத்த மாருதி சுசூகி டிசையர்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பயணிகள் வாகன பிரிவானது, எஸ்யுவி கார்களை நோக்கி வேகமாக நகர்கிறது. அடுத்தடுத்து வெளியாகும் அதிகப்படியான எஸ்யுவி மாடல்களும் இதனையே உணர்த்துகின்றன. ஆனாலும், நடப்பாண்டில் கடந்த ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரையிலான விற்பனையில், நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யுவியை பின்னுக்கு தள்ளி செடான் கார் ஒன்று முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 41 ஆண்டுகால வரலாற்றில் ஓராண்டுக்கான கார் விற்பனையில் முதலிடம் பிடிக்கும் ஒரே செடான், அதுவும் இரண்டாவது முறையாக இந்த சாதனையை படைக்கும் ஒரே கார் என்ற பெருமையை டிசையர் பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டில் முதலிடம் பிடித்த இந்த செடான், 2025ம் ஆண்டிலும் மீண்டும் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.
2025ல் விற்பனையில் மாருதி சுசூகி டிசையர் முதலிடம்
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் வரையிலான, 11 மாதங்களில் மாருதி சுசூகி டிசையர் காரின் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 416 யூனிட்கள் விற்பனையாகி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. SUV களுக்கு எதிராக சந்தைப் பங்கிற்காக செடான்கள் போராடும் அதே வேளையில், டிசையரின் வெற்றி மலிவு விலை, திறமையான மற்றும் அம்சங்கள் நிறைந்த சிறிய செடான்களுக்கான வலுவான தேவையை எடுத்துக்காட்டுகிறது. எரிபொருள் செயல்திறன், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நம்பகத்தன்மை காரணமாக தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி வாடகை கார் ஓட்டுனர்களுக்கும் டிசையர் கார் சிறந்த தேர்வாக உள்ளது.
2025ல் விற்பனையில் அசத்திய டாப் 10 கார் மாடல்கள்:
- மாருதி சுசூகி டிசையர் - 1,95,41 யூனிட்கள்
- ஹுண்டாய் க்ரேட்டா - 1,87,968 யூனிட்கள்
- டாடா நெக்சான் - 1,81,186 யூனிட்கள்
- மாருதி சுசூகி வேகன் - ஆர் - 1,79,663 யூனிட்கள்
- மாருதி சுசூகி எர்டிகா - 1,75,404 யூனிட்கள்
- மாருதி சுசூகி ஸ்விஃப்ட் - 1,70,494 யூனிட்கள்
- மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ - 1,61,103 யூனிட்கள்
- மாருதி சுசூகி ஃப்ராங்க்ஸ் - 1,59,188 யூனிட்கள்
- மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா - 1,57,606 யூனிட்கள்
- டாடா பஞ்ச் - 1,57,522 யூனிட்கள்
இந்தியாவின் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனையில் 55 சதவிகித சந்தை பங்களிப்பை, எஸ்யுவி மற்றும் க்ராஸ்-ஓவர் மாடல்கள் ஆக்கிரமித்து இருப்பதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
மாருதி சுசூகி டிசையர் விவரங்கள்:
மாருதி சுசூகி டிசையர் கார் மாடலானது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் என மொத்தம் 9 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த காரின் ஆன் - ரோட் விலையானது ரூ.7.44 லட்சத்தில் தொடங்கி ரூ.10.96 லட்சம் வரை நீள்கிறது. பெட்ரோல் இன்ஜினில் கியர்பாக்ஸ் அடிப்படையில் 24.79 கிலோ மீட்டர் முதல் 25.71 கிலோ மீட்டர் தூரம் வரையிலும், சிஎன்ஜி எடிஷனில் 33.73 கிலோ மீட்டரும் மைலேஜ் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















