Robo Shankar: அவ்வளவு தான், தூக்கிப் போட வேண்டிய நிலை... நம்பிக்கை கொடுத்த நல் உள்ளங்கள்...ரோபோ சங்கர் மனைவி நெகிழ்ச்சி!
என்ன தான் டயட்டில் இருந்தாலும், இவ்வளவு வேகமாக, அதுவும் எடை 7 கிலோ, 10 கிலோ எனக் குறையவே சந்தேகம் வந்து குடும்ப டாக்டரிடம் சென்றுள்ளனர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த பலரில் ஒருவர் ரோபோ சங்கர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வந்தார்.
சமீபகாலமாக உடல் எடை மிகவும் குறைந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மெலிந்து காணப்பட்டு வந்தார் ரோபோ சங்கர். பலரும் அவரின் உடல்நிலை குறித்து ஏதேதோ விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் ரோபோ ஷங்கர் மற்றும் அவரது மனைவி பிரியா ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்தனர்.
அடுத்தடுத்து படங்கள், வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மிகவும் பிஸியாக இருந்த ரோபோ சங்கர், 110 கிலோ எடை இருந்ததால் உடல் எடை குறைப்பதற்காக டயட்டில் இருந்து வந்துள்ளார். டயட் என்ற பெயரில் சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் அவருக்குள் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை அவரின் மனைவி கவனித்துள்ளார். என்ன தான் டயட்டில் இருந்தாலும் இவ்வளவு வேகமாக, அதுவும் எடை 7 கிலோ, 10 கிலோ எனக் குறையவே சந்தேகம் வந்து ஃபேமிலி டாக்டரிடம் சென்றுள்ளனர்.
அவர் பிளட் டெஸ்ட் செய்து பார்த்து ரிசல்ட் சொல்லமால் ரீ செக் செய்ய சொல்லியுள்ளார். பிறகு ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவியை அழைத்து, “சங்கருக்கு மஞ்சள் காமாலை ரத்தத்தில் கலந்துள்ளது. அதனால் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். எந்த பழக்கமும் இருக்க கூடாது. மூன்று மாதங்கள் பெட் ரெஸ்டில் இருந்து மருந்து மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் எப்படி அவருக்கு கவனிப்பு வழங்கப்படுமா அதே போல நான் பார்த்துக் கொள்கிறேன் என மனைவி உறுதியளிக்க, கடந்த மூன்று மாத காலமாக தொடர் சிகிச்சை மூலம் அவர் குணமடைந்து வருகிறார். அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் வீடே தலைகீழாக இருந்தது. அந்த சமயத்தில் யார் மூலமோ தகவல் அறிந்து நக்கீரன் கோபால் ரோபோ சங்கர் மனைவியை தொடர்பு கொண்டு நடந்தவை பற்றி கேட்டுத் தெரிந்துள்ளார்.
பிறகு அவர் ரோபோவை ஒரு சித்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அந்த மருத்துவர் நாடி பிடித்துப் பார்த்து இரண்டே மாதங்களில் உங்களின் உடல் நிலையை சரி செய்து விடுகிறேன் என உறுதியளித்துள்ளார். அவ்வளவு தான் என தூக்கி போட வேண்டிய நிலையில் இருந்தவரை, மருத்துவர்களின் நம்பிக்கையான வார்த்தைகளும், குடும்பத்திரன் கனிவான கவனிப்பும் தான் திருப்பி கொடுத்துள்ளது. மிகவும் வேகமாக மூன்றே மாதத்தில் மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபட்டு உடல்நிலை தேறி வருகிறார்.
இந்நிலையில், ரோபோ சங்கர் மற்றும் பிரியா இருவரும் பேசுகையில், ”இந்த மூன்று மாதங்களில் யார் உண்மையான உறவுகள் என்பதைப் புரிந்து கொண்டோம். எங்க அவர்களை பணம் கேட்டு விடுவோமோ அல்லது பழியை அவர்கள் மீது போட்டு விடுவோமோ என பலரும் ஒதுங்கினார்கள்.
நல்ல உறவுகளை விரல் விட்டு சொல்லிவிடலாம். போஸ் வெங்கட், டி.எஸ்.கே, நாஞ்சில் விஜயன், அசார் இப்படி ஒரு சிலர் உண்மையான அக்கறையோடு தினமும் விசாரித்தனர். ஆடியோ தெரபி போல தினம் போன் செய்து நீங்கள் எதுவும் பேச வேண்டாம் அண்ணா நாங்கள் பேசுவதை மட்டும் நீங்கள் கேளுங்கள் என சொல்லி பல வாய்ஸ்களில் பேசி அவரை சந்தோஷப்படுத்தினர்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.