Robo Shankar: கடைசி வரை நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசை - என்ன?
Robo shankar Passed Away: உடல்நலக்குறைவால் உயிரிழந்த ரோபோ சங்கரின் நீண்ட நாள் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது குறித்து கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கமலின் வெறித்தனமான ரசிகர்:
ஆஜானுபாகுவான தோற்றத்துடன், ஆணழகன் பட்டத்தை எல்லாம் வென்று கட்டுமஸ்தான உடலுடன் தனது மிமிக்ரி கலைத் திறமையால் திரையுலகிற்குள் நுழைந்து சாதித்தவர் ரோபோசங்கர். விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெய், விஷால் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகரான இவர் மிகப்பெரிய கமல்ஹாசன் ரசிகர் ஆவார். இவர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர் என்பது திரையுலகில் உள்ள அனைவரும் அறிந்த சேதி ஆகும். கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்த நாளையும் பேனர்கள் அடித்தும், போஸ்டர்கள் அடித்தும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருவதை ரோபோ சங்கர் வழக்கமாக வைத்திந்தார்.
நிறைவேறாத ஆசை:
கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகராக அவர் இருந்தும் திரையுலகில் 28 ஆண்டுகளாக இயங்கி வரும் ரோபோ சங்கர் ஒரு படம் கூட கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை. 1997ம் ஆண்டு முதல் திரையுலகில் இயங்கி வந்த ரோபோ சங்கர் விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார்.
ரோபோ சங்கரின் திறமையை பல முறை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ரோபோ சங்கர் வளர்ந்து வந்த காலகட்டத்தில், கமல்ஹாசனும் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டதாலும் ரோபோ சங்கரால் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க முடியவில்லை. கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகரான ரோபோ சங்கரால் கடைசி வரை கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க முடியவில்லை.
கமலிடம் ஆசி:

சமீபத்தில் நடந்த இளையராஜா பாராட்டு விழாவில் கமல்ஹாசனின் காலில் விழுந்து ரோபோ சங்கர் ஆசிர்வாதம் வாங்கினார். கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ரோபோ சங்கரின் ஆசை கடைசி வரை நிராசையாக போய்விட்டது என்று ரசிகர்கள் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
கமல் இரங்கல்:
ரோபோ சங்கர் மறைவிற்கு தொடர்ந்து திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில்,
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
திரையுலகம் அஞ்சலி:
தனது அபாரமான நடிப்பு, உடல்மொழி, வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர். மிமிக்ரியிலும் அசத்தலான திறமையை கொண்டவர். விஜயகாந்த் போன்று பல மேடைகளிலும் அசத்தலாக பேசி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர். அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ராதாரவி, பாலா, எம்எஸ் பாஸ்கர், பாடகர் மனோ உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





















