Modern Love Chennai: மாடர்ன் லவ் சென்னை....எப்படி இருக்கிறது அக்ஷய் சுந்தர் இயக்கிய மார்கழி?
ஆறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ஆந்தலாஜி மாடர்ன் லவ் சென்னை.
இளையராஜாவின் வயலினுடன் படபடப்பாக தொடங்குகிறது மார்கழி. திடீரென்று ஜாஸ்மினை யாரோ அழைக்கிறார்கள். பாடல் நிற்கிறது. ”நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள் அப்பாவுடனா, அம்மாவுடனா” என்கிற கேள்வி பதின்வயதில் இருக்கும் ஜாஸ்மினிடம் கேட்கிறார் வக்கீல் ஒருவர்.
ஜாஸ்மின் என்கிற பதின்வயதுப் பெண்ணின் பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிகின்றனர். விவாகரத்துக்குப் பின் தனது தந்தையுடன் வாழ்கிறார் ஜாஸ்மின். தனது பெற்றோரின் பிரிவால் குழம்பிய மனநிலையில் அதிகம் பேசாமல், பெரிதும் உணர்வுகளை வெளிப்படுத்தாதவராக பெரும்பாலான நேரங்களில் தனியாக இருக்கிறார் ஜாஸ்மின். கிறித்துவக் குடும்பத்த சேர்ந்த ஜாஸ்மின் சர்ச் காயரில் பாட்டுப் பயிற்சிக்கு செல்வார். மற்ற நேரங்களில் தனியாக அமர்ந்து ஒரு பாட்டை கேட்க முயற்சிக்கிறார். ஆனால் அவர் அந்தப் பாட்டை கேட்கும் நேரம் எல்லாம் யாராவது ஒருவர் அவரை இடைமறிக்கிறார்கள். தனது காயரில் புதிதாக வந்து சேரும் ஒரு இளைஞர் ஒருவரின் பால் ஈர்க்கப்படுகிறார் ஜாஸ்மின்.
மார்கழி பதின்வயதில் வரும் முதல் காதலை மிக அழகாக சொல்லியிருக்கும் ஒரு படம். படத்தின் தொடக்கத்தில் இருந்து கடைசிவரை வரும் இளையராஜாவின் பாடல் ஒன்று இந்த மொத்த படத்தை குறிப்பாக நமக்கு உணர்த்திவிடுகிறது. இளம் பருவத்தில் முதல் காதல் வரும்போது நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு பாடல் இருக்குமில்லையா? காதல் வந்ததால் அந்தப் பாடல் பிடித்ததா இல்லை பாடல் பிடித்ததால் காதல் வந்ததா என்றுகூட சில நேரம் குழப்பமாகிவிடும். அதுவரை தன் அழகைப் பற்றி பெரிதாக அக்கறை கொள்ளாதவர்கள் புதிதாக கண்ணாடி பார்க்கத் தொடங்குகிறார்கள். தன் உடலில் ஏதாவது ஒன்று குறையாக நினைத்துக்கொள்கிறார்கள். ஜாஸ்மினின் இந்தப் புதிய தத்தளிப்பிற்கு அவருக்கு ஏதாவது ஒரு புது அர்த்தம் கிடைக்கிறதா இல்லை அவர் மனம் உடைக்கப் படுகிறதா என்பதை மார்கழி மிக நேர்த்தியாக கையாள்கிறது.
ஜாஸ்மின் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சுலா சாரதியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது எதார்த்தத்தில் மனதில் ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் பெரிதளவில் வெளியே வெளிப்படுத்தாதவர்கள் பதின்வயது இளைஞர்கள். ஜாஸ்மினின் முகத்தைப் பார்த்து அவள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதை நம்மால் யூகிக்க முடியாததே சஞ்சுலாவின் நடிப்பை பாராட்டிற்குரியதாக மாற்றுகிறது. மற்றும் மில்டன் கதாபாத்திரத்தில் நடித்த ஷூ கோய் ஷெங் மிக க்யூட்டான தமிழில் நன்றாக நடித்துள்ளார்.ஏற்கனவே சொன்னது போல படத்தை தாங்கிச் செல்வது இளையராஜா. லவ் லவ் என்றே சொல் சொல் பேபி என்று சிறுவனாக மாறி முதல் காதல் உணர்வை கொண்டாடுகிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் என்றால் ஒளிப்பதிவாளர் விகாஸ் வாசுதேவன் வைத்திருக்கும் சற்று வித்தியாசமான பி.ஓ.வி ஷாட்ஸ் காட்சிகளுக்குள் சலிப்பு ஏற்படவிடாமல் செய்கின்றன.