6 Years Of Taramani : கடலளவு நேசிப்பதும் மலையளவு வெறுப்பதும் காதலில்தான்.. தரமணி ரிலீஸாகி 6 வருஷங்களாச்சு..
இயக்குநர் ராம் இயக்கி வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடித்து வெளியான தரமணி திரைப்படம் இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.
கற்றது தமிழ் ராம் இயக்கிய மூன்றாவது திரைப்படம் தரமணி வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நவீனமையமாகி வரும் வாழ்க்கைச் சூழலில் ஆண் பெண் இருவருக்கும் இடையில் ஏற்படும் உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டது தரமணி.
மகத்தான காதலில், சில்லரை மனிதர்கள்..
ஆங்கிலத்தில் ஒரு புகழ்பெற்ற சொல்லாடல் இருக்கிறது. Everything is fair in love. காதலில் எல்லாமும் சரியானதே. இந்த உலகத்தின் மகத்தான மனிதர்கள் அனைவரும் தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது காதல் கவிதை எழுதியிருப்பார்கள் என்று எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஒருமுறை சொல்லியிருக்கிறார். எவ்வளவு பெரிய கலைஞர்களின் வாழ்க்கையை படித்தாலோ படமாக பார்த்தாலோ அவர்களின் வாழ்க்கையில் காதலுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. காதல் என்னமோ மகத்தானதுதான் ஆனால் அதை செய்யும் மனிதர்கள் மிக சின்னவர்களாக இருப்பதுதான் காதலில் வரும் பிரச்சனைகளுக்கு காரணம்.
ஆண் ஒருவன்.. பெண் ஒருத்தி
இரண்டு வகையாக தரமணி படத்தின் கதையை விவரிக்கலாம். இந்த சமூகத்தில் ஒரு பெண் எவ்வளவு படித்து சொந்தமாக ஒரு வேலை செய்து பொருளாதார ரீதியாக முன்னேறி தனது நிலையை மாற்ற நினைத்தாலும் கலாச்சார ரீதியாக பழமைக்குள் பெண்ணை ஒரு போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆண்களின் கண்களில் இருந்து மட்டும் அவளால் விடுபட முடிவதில்லை.
அதே நேரத்தில் அதே கலாச்சாரம் கற்பித்த பழமையான நம்பிக்கைகளாகவே இருந்தாலும் அதையே நம்பி வளரும், ஆனால் நவீனமான ஒரு பெண்ணை அவளை அவன் எவ்வளவு நேசித்தாலும் அவளது வாழ்க்கை முறைக்கு அவனால் பழகிக்கொள்ள முடிவதில்லை.
கடலளவு நேசிப்பதும் மலையளவு வெறுப்பதும் காதலில்தான்
இந்த இரு தரப்பில் பிரதிநிதிகள் காதலிக்கும்போது ஏற்படும்போது ஏற்படும் சிக்கல்களே தரமணி படத்தின் மையக்கதை. இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு பல்வேறு துணைக் கதாபாத்திரங்களை அவர்களின் வாழ்க்கையோடு இணைக்கிறார் இயக்குநர். முக்கியமாக எந்த கதாபாத்திரத்தின் சார்பையும் எடுக்காமல் இரு தரப்புகளின் நியாயங்களையும் அவர்களின் சிக்கல்களையும் முன்வைக்க முயற்சிக்கிறார். சில சின்ன உண்மைகளை உணர உலகத்தில் கடைக்கோடி எல்லைவரை சென்று தொட்டுவரவேண்டியதாக இருக்கிறது.
இருவேறு வாழ்க்கைச் சூழலில் வளர்ந்த இந்த இரு நபர்கள் சேர்ந்து வாழாமல் இருக்க ஆயிரம் காரணங்களை சொல்லலாம் ஆனால் சேர்ந்து வாழ்வதற்கு ஒரே ஒரு காரணம்தான் அவர்களிடம் இருக்கிறது. அதுவும் காதல்தான்.
இவ்வளவு சிரமப்பட தேவையே இல்லை. பேசாமல் அந்த உறவை முடித்துக் கொள்ளலாம் என்று தோன்றும் அளவிற்கு உறவுகளில் நமது சிந்தனை தாராளமயமாகி விட்டதுதான். Everything is fair in love என்கிற வரி அதோடு முடிவதில்லை அதன் முழு வாக்கியம் Everything is fair in love and war. இந்த உலகத்தின் மிகப்பெரிய குற்றங்கள், மன்னிப்புகள் , துரோகங்கள், தியாகங்கள் அதிகம் நடந்தது இந்த இரண்டில்தான்.
எத்தனை போர்கள் காதலுக்குள் இருந்தாலும் அதை வெல்லவே காதலர்கள் முயல்வார்கள் என்கிற மறைமுகமான கருத்தை சொல்லி முடிகிறது தரமணி.