25 years of Padayappa: இன்றும் தனி வழியில் வெற்றி கொடிக்கட்டும் 'படையப்பா'... நினைவில் நிற்கும் கிளாசிக் படம்!
'என் வழி தனி வழி' என என்றுமே தனி வழியில் பயணிக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படம் 'படையப்பா' வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
![25 years of Padayappa: இன்றும் தனி வழியில் வெற்றி கொடிக்கட்டும் 'படையப்பா'... நினைவில் நிற்கும் கிளாசிக் படம்! Rajinkanth's Padayappa movie has the crossed a milestone of 25 years 25 years of Padayappa: இன்றும் தனி வழியில் வெற்றி கொடிக்கட்டும் 'படையப்பா'... நினைவில் நிற்கும் கிளாசிக் படம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/fd7b7aa798d0174ae9cc9b0bc7feba7c1680969411431224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர ரசிகர்களுக்கும், 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் இன்றும் அவர்களின் ஃபேவரட் திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெறும் ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படம் 'படையப்பா'. ரஜினி ஒரு காட்சியில் வருகிறார் என்றால் வேறு யார் மேலும் போகஸ் போகாத அளவிற்கு ஆக்கிரமித்து இருப்பார். படம் முழுவதிலும் அந்த மேஜிக் செய்து இருப்பார். அப்படி இன்றும் எவர்கிரீன் திரைப்படமாக இருக்கும் ' படையப்பா' வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நேற்று ரிலீசானது போல் உள்ளது ஆனால் 25 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.
அல்டிமேட் வில்லி :
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தில் ஒரு பவர்ஃபுல் வில்லியாக, தமிழ் சினிமாவில் இருந்த வில்லன்களை எல்லாம் ஒரே படத்தில் தூக்கி சாப்பிட்டவர் இன்றும் நீலாம்பரியாக அடையாளம் காணப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன். 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நந்தினியின் வில்லத்தனமான குணாதிசயங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். ரஜினிக்கு நிகரான ஒரு ரோல் கொடுக்கப்பட்டதை மிக சிறப்பாக நியாயம் செய்தவர். ரஜினி எந்த அளவுக்கு அவரின் ஸ்டைலால் ரசிகர்களை ஆக்ரமித்தாரோ அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்து இருந்தது நீலாம்பரியின் ஒவ்வொரு அசைவுகளும். இப்படி ஒரு பிடிவாதக்காரியா என்ன அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும் அளவுக்கு நேர்த்தியாக இருந்தது அவரின் நடிப்பு. இன்றும் ரம்யா கிருஷ்ணன் போகும் இடம் எல்லாம் பயணிக்கிறது நீலாம்பரி கதாபாத்திரம்.
பட்டையை கிளப்பிய பஞ்ச் வசனங்கள்:
' மாப்பிள்ளை இவர்தான் ஆனால் இவர் போட்டு இருக்குற சட்டை என்னுது' இது இன்றும் பலரும் பயன்படுத்தும் ஒரு டயலாக். இப்படி ஏராளமான வசனங்கள் படத்தில் கூஸ்பம்பஸ் வரவைத்த வசனங்கள். 'அதிகமா ஆசை படுற ஆம்பளையும் அதிகமா கோப படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல', 'என் வழி தனி வழி' என ரஜினியின் பஞ்ச் வசனங்கள் அனைத்திற்குமே தியேட்டரில் கிளாப்ஸ் பறந்தது. அன்று மட்டுமல்ல அந்த வசனங்களை இன்று கேட்டாலும் கைதட்டலும் விசிலும் பறக்கும். வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்லை என்ற வசனத்திற்கு இன்றும் உயிர் கொடுக்கிறார். ரஜினி என்றால் ஸ்டைல் ! ஸ்டைல் என்றால் ரஜினி !
நெகிழவைத்த நடிகர் திலகம் :
ரஜினியின் மனைவியாக வரும் சௌந்திரயாவிற்கு பெரிய அளவில் நடிக்க காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்ததை சிறப்பாக செய்து இருந்தார். சுத்தி சுத்தி வந்தீக பாடலில் நம்மை சுத்த வைத்துவிட்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனதில் நின்றார். தந்தை - மகன் சென்டிமென்ட் காட்சிகள் நெகிழ்ச்சியடைய செய்தது. அவர் நடித்த கடைசி திரைப்படம் இதுவே.
பக்கபலமாய் இசைப்புயலின் இசை :
ஏ.ஆர். ரஹ்மான் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஹைலைட்டாக பவர் சேர்த்தது. பாடல்கள் ஒவ்வொன்று கேட்போரின் நாடி நரம்பை புடைக்க செய்யும் அளவுக்கு ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது. படம் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் காட்சி வரை பரபரப்பாகவே வைத்து சுவாரஸ்யம் சற்றும் குறையாமல் நகர்த்தி இருந்தார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படங்களில் ஒன்று 'படையப்பா'. 25 ஆண்டுகளை கடந்த பின்பும் இன்றும் நினைவுகளில் பசுமையாக இருப்பது தான் படத்தின் வெற்றிக்கு அடையாளம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)