![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
R. Sundarrajan: வில்லனாக எம்.ஜி.ஆர் வாங்கிய முதல் சம்பளம்! என்ன செய்தார் தெரியுமா? உண்மை கதை பகிர்ந்த ஆர். சுந்தர்ராஜன்
R. Sundarrajan: அன்று எம்.ஜி.ஆர் போல் இயற்கையாகவே வள்ளல் குணம் கொண்ட ஒருவரை இன்று திரையுலகில் பார்க்கவே முடியாது - இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்
![R. Sundarrajan: வில்லனாக எம்.ஜி.ஆர் வாங்கிய முதல் சம்பளம்! என்ன செய்தார் தெரியுமா? உண்மை கதை பகிர்ந்த ஆர். சுந்தர்ராஜன் R. Sundarrajan shares a story of MGR generous character which no body can compete R. Sundarrajan: வில்லனாக எம்.ஜி.ஆர் வாங்கிய முதல் சம்பளம்! என்ன செய்தார் தெரியுமா? உண்மை கதை பகிர்ந்த ஆர். சுந்தர்ராஜன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/19/43a51ab9083bc0d36696a02d70da1cf81702989466766224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் 80ஸ் - 90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குநராக, நடிகராக, எழுத்தாளராக திகழ்ந்தவர் ஆர். சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், ராஜாதி ராஜா, திருமதி பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர்.
தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் ஆர். சுந்தரராஜன் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். பல விஷயம் குறித்தும் மிகவும் வெளிப்படையாக பதிலளித்த ஆர். சுந்தராஜனிடம் இந்த திரையுலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அளவுக்கு உதவி செய்பவர்கள் என யாரவது இருக்கிறார்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர். சுந்தர்ராஜன், அவரின் அளவுக்கு யாராலும் வர முடியாது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் எம்.ஜி.ஆரின் வள்ளல் குணத்தை பற்றின ஒரு கதையை கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர் ஸ்டண்ட், சிலம்பம், கத்தி சண்டை எல்லாம் மிகவும் நன்றாக செய்வார் என்பதால் அவரை வில்லனாக ஒரு படத்தில் நடிக்க அவருடைய அண்ணன் அவரை ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு அழைத்து செல்கிறார். ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள 50 ரூ சம்பளம் பேசப்பட்டது. அதில் 25 ரூ மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளார்கள். அதில் 10 ரூபாயை மட்டும் தன்னுடைய அம்மாவிடம் சென்று கொடுத்தாராம் எம்.ஜி.ஆர். அன்று இரவு அவரின் அண்ணன் வந்து அம்மாவிடம் எம்.ஜி.ஆரை படப்பிடிப்புக்கு அழைத்தது பற்றி சொல்லி சம்பளம் கொண்டு வந்து கொடுத்தானா? எவ்வளவு கொடுத்தான் என கேட்டுள்ளார். 10 ரூபாய் கொண்டு வந்து கொடுத்தான் என அம்மா சொல்ல, உடனே அண்ணன் நான் தான் 25 ரூபாய் வாங்கி கொடுத்தேன். அவன் வந்தால் கேளு என சொன்னாராம்.
எம்.ஜி.ஆர், வீட்டுக்கு வந்ததும் அவரின் அம்மா மீதி சம்பளம் பற்றி கேட்க "நான் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கியதும் அங்கே ஒரு குடும்பம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் வேலையின்றி நின்று கொண்டு இருந்தார்கள். அம்மா, அப்பா, இரு வயதுக்கு வந்த பெண்களும் ஒரு பையனும் எங்கு போவதென தெரியாமல் அந்த பஸ் ஸ்டாண்டில் படுத்து இருந்தார்கள். அவர்களுக்கு 15 ரூபாயை கொடுத்துவிட்டு மீதி இருந்த 10 ரூபாயை தான் உங்களிடம் கொடுத்தேன் என எம்.ஜி.ஆர் அவருடைய அம்மாவிடம் சொன்னாராம்.
இதை கேட்டு பூரித்து போன எம்.ஜி.ஆரின் அம்மா மூத்த மகனை அழைத்து எந்த கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் உன்னோடும் உன்னோட தம்பிகளோடும் நிர்கதியாக நின்றேனோ அந்த இடத்தில் நின்ற ஒரு குடும்பத்திற்கு உதவி செய்து விட்டு வந்து இருக்கிறான் உன் தம்பி என சந்தோஷமாக சொன்னாராம் எம்.ஜி.ஆரின் அம்மா.
இந்த கதை எதற்காக என்றால் எம்.ஜி.ஆர் தன்னிடம் இருக்கும் போது அல்ல இல்லாத போது கூட தன்னிடமிருந்த பணத்தில் பாதியை உதவியாக கொடுத்தவர். அந்த பழக்கம் அவருக்கு இடையில் வந்தது கிடையாது. அது அவரின் பிறவி குணம். அவரை போல மற்றவர்களுக்கு உதவி செய்ய யாராலும் முடியாது என கூறியிருந்தார் ஆர். சுந்தர்ராஜன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)