Pushpa 2 First Single: உழைப்பாளர்கள் தினத்தன்று வெளியாகும் புஷ்பா 2 முதல் பாடல்.. அப்டேட் தந்த படக்குழு!
Pushpa 2: இயக்குநர் சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தெலுங்கு சினிமாவில் இயக்குநர் ராஜமௌலிக்குப் பின்னர், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் சுகுமாறன். இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் கலெக்ஷன் கிங் அல்லு அர்ஜூன் தனது அசாத்திய நடிப்பினால் புஷ்பா படத்திற்காக தேசிய விருதை பெற்றார். முதல் பாகத்தின் இறுதியிலேயே இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட்டை படக்குழு கொடுத்திருந்தது. இது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்த படத்திற்கு 2021ஆம் ஆண்டு முதல் எதிர்பார்ப்பு இன்றுவரையும் உள்ளது.
புஷ்பா திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், படக்குழு புஷ்பா 2-வின் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் வரும் மே மாதம் முதல் தேதியில், அதாவது, தொழிலாளர்கள் தினத்தில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது. மேலும் மே மாதம் முதல் தேதியில், காலை 11 மணி 7 நிமிடங்களுக்கு பாடல் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியான டீசர்
ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தீர்க்கும் வகையில், படக்குழு அவ்வப்போது படம் குறித்து ஏதாவது அப்டேட் கொடுத்தவண்ணமே இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் அல்லு அர்ஜுனின் தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு படக்குழு ஏப்ரல் 8ஆம் தேதி படத்தின் டீசரை வெளியிட்டார். இது புஷ்பா படத்தின் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், பெரும்பான்மையான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.
புஷ்பா படத்தின் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மிடுக்கான காவல்துறை அதிகாரியாக வந்த ஃபகத் ஃபாசில் தனது அசாத்திய நடிப்பினால் புஷ்பா படத்தின் தரத்தினை உயர்த்திவிட்டார் என்றே கூறவேண்டும். படத்தின் இரண்டாம் பாகத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பினைக் காணவே பெரும் ரசிகர் பட்டாளம் காத்துக்கொண்டு உள்ளது.
கதை என்ன?
ஆந்திரா மாநிலத்தின் அடர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரம் கடத்தும் கடத்தல்காரர்கள் பற்றிய கதையை படமாக்கினர். இந்த படத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், ஒரு தரப்பினர் எதிராகவும் தங்களது கருத்தினைத் தெரிவித்தனர். படத்தினை ஆதரித்தவர்கள், படத்தின் இசை, படத்தின் திரைக்கதை, நடிகர்களின் அசாத்திய நடிப்பு ஆகியவற்றை புகழ்ந்து பேசினர். அதேநேரத்தில் படத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டவர்கள் தரப்பில், “ செம்மரம் கடத்தும் கடத்தல்காரர்களை ஹூரோவாகவும், கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு தங்களது உயிரை விட்ட காவல்துறையினை எதிரியாகவும் சித்தரித்து அதனை கொண்டாடும் மனபோக்கையும் அப்படியான சினிமாவை எதிர்ப்பதாக” தெரிவித்தனர்.