K Rajan: புதுச்சேரி சிறுமி கொலை.. விஜய் தவிர எந்த நடிகரும் ஏன் வாயை திறக்கவில்லை? - கே.ராஜன் கேள்வி
புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2 ஆம் தேதி காணாமல் போனார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஏன் முன்னணி நடிகர் குரல் கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் கே.ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.
புதுச்சேரி சிறுமி மரணம்
புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2 ஆம் தேதி காணாமல் போனார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து குழந்தையை தேடினர். இதில் அப்பகுதி சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு கேமராவில் மட்டும் சிறுமி இருப்பது தெரிய வந்தது.
இதனால் அச்சிறுமி அப்பகுதியை விட்டு வெளியேறவில்லை என உறுதி செய்து வீடு வீடாக போலீசார் விசாரித்தனர். சந்தேகத்தின் பேரில் 5 பேர் விசாரிக்கப்பட்டனர். இதனிடையே காணாமல் போன சிறுமி அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறுமி உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
தயாரிப்பாளர் கே.ராஜன் கேள்வி
இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சமீபத்தில் வந்த பல படங்கள் வெட்டு, குத்து என வன்முறை நிறைந்து தான் காணப்படுகிறது. ரஜினி படமாக இருந்தாலும் சரி, விஜய் படமாக இருந்தாலும் சரி வன்முறை காட்சி தான் இருக்கிறது. குடிப்பழக்கம் இளைஞர்களை சீரழிக்கிறது. அது அவர்களின் மதியை மயக்கி பாலியல் தூண்டலை உண்டாக்கி பெண் குழந்தைகளை மிகுந்த பாதிப்புக்குள்ளாகுகிறது. புதுச்சேரியில் நடந்தது மிகப்பெரிய கொடூரமான செயலாகும். டெல்லியில் நிர்பயா விஷயத்தில் வேகமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இங்கே புதுச்சேரியிலும் எடுக்கப்பட வேண்டும்.
நடிகர் விஜய் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். இதை நான் வரவேற்கிறேன். அந்த கடமை தேவை. கோடிக்கணக்கில் தமிழக மக்களின் பணத்தை சம்பளமாக வாங்கினால் மட்டும் போதாது. ஹீரோக்களுக்காக தான் மக்கள் படம் பார்க்க வருகிறார்கள். ஹீரோக்கள் செய்யது நல்லது, கெட்ட விஷயங்களை தான் ரசிகர்களும் செய்கிறார்கள். இன்றைக்கு சமுதாயத்தில் நடக்கும் பல கெட்ட விஷயங்களுக்கு சினிமாவும் காரணம் என நினைக்கையில் நான் வேதனைப்படுகிறேன்.
விஜய் தவிர எந்த நடிகரும் வாயை திறக்கவில்லை. பணம் வாங்குவதற்கும், உங்கள் படம் பார்ப்பதற்கும் மட்டுமா மக்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் இப்படிப்பட்ட கொடுமைகள் எங்கேயும் நடக்காத வகையில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.