ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி..நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கு குவியும் பாராட்டு
மறைந்த ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா ரூ 1.10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்

ஆபரேஷ் சிந்தூர்
காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் , தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானார்கள். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு, 'லஷ்கர்-இ-தொய்பாவின்' கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட தாக்குதலை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது நடத்தியது இந்தியா.
ஒரே இரவில், இந்திய விமானப்படையின் விமானங்கள், ஏவுகணைகளை வீசி 9 தீவிரவாத நிலைகளை தாக்கி அழித்தன. அதைத் தொடர்ந்து, மறுநாளும், இந்திய விமானப்படையின் தற்கொலை ட்ரோன்கள், பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமானப்படை தளங்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதையடுத்து ஸ்தம்பித்துப்போன பாகிஸ்தான், இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி, பொதுமக்களை குறி வைத்து தாக்குதலை நடத்தியது. இதற்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கின. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் கலங்கிய சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், சமரசம் செய்து வைக்க முன்வந்தன. ஏற்கனவே சீனாவில் அழைப்பை ஏற்க இந்தியா மறுத்த நிலையில், பல முறை முயன்ற அமெரிக்கா, இறுதியில் இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, இரு தரப்பிலும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
உயிரிழந்த ராணுவத்தினர் குடும்பத்திற்கு ப்ரீத்தி ஜிந்தா நிதியுதவி
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். உயிரிழந்த இந்திய ராணுவத்தினரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கக பாலிவுட் நடிகை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா ரூ 1.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட ப்ரீத்தி ஜிந்தா இப்படி கூறினார் " நம் வீரர்களின் குடும்பங்களை ஆதரிப்பது நம் பொறுப்பாகும். நம் வீரர்கள் செய்த தியாகங்களை ஒருபோதும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நின்று அவர்கள் முன்னேற உதவ முடியும் . தேசத்திற்கு அதன் துணிச்சலான பாதுகாவலர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்' என ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்தார்





















