Por Thozhil Box Office: 10 கோடிகளைக் கடந்த வசூல்... பாராட்டுக்களுடன் வசூலையும் அள்ளும் ‘போர் தொழில்’!
சித்தார்த்தின் ‘டக்கர்’ படம் பெரும் ஓப்பனிங்குடன் வெளியான நிலையில், முதல் ஷோ காட்சிகளுக்குப் பிறகு ‘போர் தொழில்’ திரைப்படம் வரவேற்பைப் பெற்று நெட்டிசன்களின் பாராட்டுகளை அள்ளத் தொடங்கியது.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை மே.10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ள திரைப்படம் போர் தொழில்.
சரத்குமார் - அசோக் செல்வன் இருவரது வித்தியாசமான கூட்டணியில் க்ரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
நடிகை நிகிலா விமல் கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் மறைந்த நடிகர் சரத்பாபு இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கலைச்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், அய்யப்பனும் கோஷியும் புகழ் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
முன்னதாக போர் தொழில் திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறன. போலீஸ் கதாபாத்திரங்களில் சரத்குமார் - அசோக் செல்வன் இணை நடிக்க வித்தியாசமான இப்படத்தின் ப்ரொமோஷன்களும் ரசிகர்களை ஈர்த்து லைக்ஸ் அள்ளின.
இந்நிலையில், படத்தின் பத்திரிகையாளர் காட்சியைத் தொடர்ந்து பெரும்பாலான ஊடகங்களின் வாழ்த்துகளைப் பெற்று இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக்குவித்து க்ரைம் த்ரில்லர் பட ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது.
தொடர்ந்து கடந்த மே.9ஆம் தேதி போர் தொழில் திரைப்படம் டக்கர், விமானம் ஆகிய படங்களுடன் இணைந்து வெளியானது. இவற்றில் சித்தார்த்தின் டக்கர் படம் தமிழ், தெலுங்கு என பெரும் ஓப்பனிங்குடன் வெளியான நிலையில், முதல் ஷோ காட்சிகளுக்குப் பிறகு போர் தொழில் திரைப்படம் வரவேற்பைப் பெற்று நெட்டிசன்களின் பாராட்டுகளை அள்ளத் தொடங்கியது.
இந்நிலையில், ராட்சசன் படத்துக்குப் பிறகு வெளியான தரமான த்ரில்லர் படம் எனும் ரீதியில் பாராட்டுகளை அள்ளி வசூல் ரீதியாகவும் படம் ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது.
அந்த வகையில், போர் தொழில் படத்தின் முதல் 6 நாள்கள் வசூல் நிலவரத்தை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவர தரவுகளை பகிரும் sacnilk நிறுவனம் பகிர்ந்துள்ளது.
அதன்படி, முதல் நாள் 95 லட்சங்களையும், இரண்டாம் நாள் 2.3 கோடிகளையும், மூன்றாம் நாள் 2.95 கோடிகளையும், நான்காம் நாள் 1.55 கோடிகளையும், ஐந்தாம் நாள் 1.45 கோடிகளையும், ஆறாம் நாளான இன்று தோராயமாக 1.30 கோடிகளையும் என மொத்தம் இதுவரை 10.50 கோடிகள் வரை போர் தொழில் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் 6 கோடிகள் செலவில் இப்படம் உருவான நிலையில், தற்போது 10.50 கோடிகளை வசூலித்துள்ளது. இந்நிலையில் வரும் இரண்டாவது வார இறுதியில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Por Thozhil Day 6 Afternoon Occupancy: 20.03% (Tamil) (2D)
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) June 14, 2023
#PorThozhil
https://t.co/WxPOSmHy7O
தரமான ப்ளாக்பஸ்டர் படத்தை இப்படம் வழங்கியிருப்பதாக ஒரு பக்கம் இப்படத்துக்கு பாராட்டுகள் குவியும் நிலையில், மறுபுறம் சைக்கோ கொலையாளிகளை தொடர்ந்து வில்லன்களாக சித்தரிக்கும் பாணியை இப்படமும் பின்பற்றியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.