Pathan Controversy: ஷாருக்கானை உயிருடன் எரிப்பேன்; அனலை கக்கிய அயோத்தியா துறவி!
பதான் படத்தின் 'பேஷரம் ரங்' பாடலுக்கு தொடர்ந்து சர்ச்சை கிளம்பி வருகிறது.
ஷாருக்கான் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் 'பதான்' திரைப்படத்துக்கு தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன; சமீபத்தில் பதான் படத்தின் 'பேஷரம் ரங்' பாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்பாடல் வெளியான நாள் முதல் வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள் என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 'பேஷரம் ரங்' பாடல் சர்ச்சை குறித்து தபஸ்வி சாவ்னியைச் சேர்ந்த துறவியான பரம்ஹன்ஸ் ஆச்சார்யா, ஷாருக்கானை உயிருடன் எரிக்கும் அளவிற்கு செல்வேன் என பேசியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது;
இது குறித்து அவர் பேசும் போது, “எங்களின் சனாதன தர்மத்தை சேர்ந்த மக்கள் இது குறித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஷாருக்கானை நேரில் சந்திக்க நேரிட்டால், உயிருடன் எரித்து விடுவேன்' என மிகவும் ஆவேசத்துடன் பேசினார்.
மேலும் அவர் கூறுகையில் ‘பதான்’ திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டால் அங்கும் தீ வைத்து கொளுத்துவேன். மக்களுக்கும் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். இதற்கு முன்னர் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்ற இந்த துறவி ஹனுமன்கர்ஹியின் ராஜு தாஸும் திரைப்படத்திற்கும் இதே போல எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 'பேஷரம் ரங்' பாடலில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் தீபிகா படுகோனின் உடையின் நிறம் போன்றவற்றால் அதிருப்தி அடைந்த வலதுசாரி அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைந்து ‘பேஷரம் ரங்’ என்ற பாடலின் தலைப்பை எதிர்த்து வருகிறது. இது போன்ற திரைப்படங்களை இந்து சமுதாயம் ஒருபோதும் ஏற்காது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பதான் படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் காவி நிற பிகினியை பயன்படுத்தியதற்காக அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி மும்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், இந்து மதத்தை புண்படுத்தும் வகையிலும் வேண்டும் என்றே காவி நிறத்தை பயன்படுத்தியதாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஹீரோ, ஹீரோயின் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 'பதான்' படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என்றும் 'பேஷரம் ரங்' பாடலில் காட்சிகளும் உடையும் திருத்த படாவிட்டால் திரையரங்கில் படத்தை வெளியிடுவது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.