64 Years of Deiva Magan: நடிப்பில் தனக்குத்தானே போட்டி.. ஆஸ்கருக்கு பரிந்துரை.. 64 ஆண்டுகளை கடந்த சிவாஜியின் ‘தெய்வ மகன்’...!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘தெய்வ மகன்’ படம் வெளியாகி 64 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘தெய்வ மகன்’ படம் வெளியாகி 64 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் படம்
பழம் பெரும் இயக்குநர் ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய தெய்வமகன் திரைப்படத்தில் 3 வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். மேலும் ஜெயலலிதா, சுந்தர்ராஜன், நம்பியார், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், பண்டரி பாய் என பலரும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். புகழ்பெற்ற பெங்காலி நாவலாசிரியரான நிஹார் ரஞ்சன் குப்தாவின் ‘உல்கா’ என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்ற தெய்வமகன் படம் வசூல் ரீதியாக 100 நாட்களை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இந்த படம் தான் தமிழ் சினிமாவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் படமாகும்.
படத்தின் கதை
வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கும் அப்பா சிவாஜிக்கு முகத்தில் ஒரு தழும்பு இருக்கிறது. அவருக்கு இரட்டை குழந்தைகள் (சிவாஜி கணேசன்) பிறக்க அதில் ஒரு குழந்தைக்கு தன்னைப் போல தழும்பு இருக்கிறது. தான் வாழ்நாள் முழுவதும் அனுபவித்த அதே வலியை மகன் அனுபவிக்காமல் இருக்க வேண்டும் என நினைத்து மேஜர் சுந்தர்ராஜனிடம் சொல்லி கொல்ல சொல்கிறார். அவரோ ஆசிரமத்தில் ஒப்படைக்க அங்கே கண்ணன் என்ற பெயரில் முகத்தில் தழும்பு உள்ள சிவாஜி வளருகிறார்.
மறுபக்கம் இன்னொரு சிவாஜி செல்வ செழிப்புடன் வாழ்கிறார். அவரிடமுள்ள பணத்தை பறிக்கும் நண்பனாக நம்பியார் வருவார். இதனிடையே ஆசிரமத்தில் வளரும் சிவாஜிக்கு தன்னை பற்றிய உண்மை தெரிய வருகிறது. தன் பெற்றோரை தேடி சென்ற இடத்தில் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதையாகும்.
கூடுதல் தகவல்கள்
நடிப்பு சக்கரவர்த்தியென்று போற்றப்படும் சிவாஜி கணேசன், மிகவும் வித்தியாசமாக 3 வேடங்களிலும் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பலே பாண்டியா படத்துக்குப் பின் 2வது முறையாக 3 வேடங்களில் அவர் நடித்திருந்தார். டைட்டிலில் இருந்து கிளைமேக்ஸ் வரை அருமையாக கதை சொல்லல், ஒளிப்பதிவு என தெய்வ மகன் படம் அழகாய் படமாக்கப்பட்டிருக்கும்.
சங்கர், விஜய், கண்ணன் என 3 வேடங்களில் தனக்குத்தானே போட்டி போட்டு நடித்திருப்பார். ஆரூர்தாஸின் வசனங்கள் பட்டையை கிளப்பியது. ஒரு காட்சியில் மேஜர் சுந்தர்ராஜனிடம், பிளாங்க் செக் ஒன்றை அப்பா சிவாஜி கொடுக்க அது மகன் சிவாஜி (கண்ணன்) கையில் கிடைக்கும். அதில் அப்பா சிவாஜியின் கையெழுத்தைப் பார்த்து, “என் தலையெழுத்தையே அலங்கோலமாக்கிய எங்க அப்பாவோட கையெழுத்து எவ்ளோ அழகா இருக்கு பாருங்க டாக்டர்” என வசனம் இடம் பெற்றிருக்கும்.
படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை பெரும் பலமாக அமைந்தது. கண்ணதாசன் பாடல்களை எழுதினார். “காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்”, “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா”, “கூட்டத்திலே யார்தான்”, “காதல் மலர்க்கூட்டம் ஒன்று” உள்ளிட்ட பாடல்கள் இன்றைக்கும் ரசிக்க வைக்கும்.
இதையும் படிங்க: ’நான் ரெடிதான்’ பாடலுக்கு காருக்குள் குத்தாட்டம் போட்ட அதிதி.. தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
மேலும் ஒரு காட்சியில் 3 சிவாஜியும் இருப்பார்கள்.அதாவது கண்ணன் அலமாரியில் ஒளிந்துகொண்டிருப்பார். விஜய்க்கு செக் கொடுக்கும்படி அப்பாவான ஷங்கரிடம் சைகை செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதனை படமாக்குவதில் சிரமங்கள் இருந்த நிலையில் கஷ்டப்பட்டு அந்த காட்சியை எடுத்து விட்டார் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர். இந்த ஏழு நிமிட காட்சியை ட்ரிம் செய்ய வேண்டும் என்று இயக்குநரிடம் எடிட்டர் கந்தசாமி தெரிவிக்க, அதனை ட்ரிம் செய்ய திருலோகச்சந்தருக்கு மனமே வரவில்லை.
அந்த அளவுக்கு நடிப்பு சக்கரவர்த்தியாக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் “தெய்வ மகன்” ஆகவும் மிளிர்ந்தார் சிவாஜி கணேசன்...!
மேலும் படிக்க: ’சூழ்ச்சி செய்கிறார்கள், திரிக்கிறார்கள், மாற்றுகிறார்கள்..’ சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி விளக்கம்!