Surya 2D Entertainment | நீதிமன்ற வாசலேறிய சூர்யா படத்தின் இந்தி ரீமேக்.. இதுதான் தயாரிப்பாளரின் விளக்கம்..!
சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது.
சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு பேசியபடி வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
"கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்த இந்த வழக்க்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை,” என்று ராஜசேகர் கூறியுள்ளார்.
“எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்ரா இயக்கத்தில் வெளியான படம் ’சூரரைப் போற்று ‘. இந்த படம் இந்தியாவில் எளியோரும் பயணம் செய்யும் வகையில் பட்ஜெட் விமான சேவையை அறிமுகப்படுத்திய ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியா அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல பிரபலங்களும் படத்தை வெகுவாக பாராட்டினர். சூர்யாவும் ஒரு தனிமனிதன் பலருக்கான கனவுகளை சுமந்துக்கொண்டு எப்படி சிரமப்படுகிறார் என்பதை அப்படியே திறையில் நடித்து காட்டியிருந்தார். அவருக்கு ஈடாக அபர்ணா பாலமுரளியும் கலக்கியிருந்தார்.
சூரரைப் போற்று, 78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யபட்டது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட பிராந்திய மொழி படமாகவும் சாதனை படைத்தது. IMDB தரவரிசையில் 'தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்' மற்றும் 'தி காட்பாதர்' படங்களுக்கு அடுத்து 9.1 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தை சூரரைப் போற்று பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற