Maduri Dixit: மாதுரி தீட்சித்தை இழிவுபடுத்திய நெட்ஃப்ளிக்ஸ் வெப்சீரிஸ்..! கொதித்தெழுந்த பாலிவுட் பிரபலங்கள்..!
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரபல வெப்சீரிசில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தை ஏராளமான பார்வையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒளிபரப்பாகும் இணைய தொடர்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். அந்த வகையில் அதில் ஒளிபரப்பாகும் ஒரு புகழ்பெற்ற இணைய தொடர் 'தி பிக் பேங் தியரி'. இந்தியர்கள் உட்பட இந்த தொடருக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி :
இந்த இணைய தொடரில் ஒரு குறிப்பிட்ட எபிசோடில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகை மாதுரி தீட்சித் இருவரையும் ஒப்பிடும் வகையில் காட்சி ஒன்று இடம்பெற்று இருந்தது. அந்த காட்சியில் ஷெல்டன் கூப்பர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜிம் பார்சன்ஸ் ஐஸ்வர்யாவை 'ஒரு ஏழையின் மாதுரி தீட்சித்' என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு ராஜேஷ் கூத்ரப்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்த குணால் நய்யார் "ஐஸ்வர்யா ராய் ஒரு தெய்வம் அவருடன் ஒப்பிடுகையில், மாதுரி தீட்சித். ஒரு தொழுநோயாளி விபச்சாரி" என குறிப்பிடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த காட்சி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சியில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை இழிவுபடுத்தும் விதமாக இடம்பெற்று இருந்த காட்சிக்கு எதிராக நெட்ஃப்ளிக்ஸ் மீது வழக்கு தொடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அவரின் ரசிகர் ஒருவர். அந்த நோட்டீஸில் பெண்களுக்கு எதிரான வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதால் அவற்றை நீக்க வேண்டும் அல்லது தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
ஜெயா பச்சன் ரியாக்ஷன் :
மேலும் இந்த கருத்து குறித்து பழம்பெரும் நடிகை, ஐஸ்வர்யாராயின் மாமியாரும் மற்றும் அரசியல்வாதியுமான ஜெயா பச்சன் பதிலளிக்கையில் "குணால் நய்யார் ஒரு பைத்தியமா? அவரை மனநல காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும். அவரது கருத்து குறித்து அவரது குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள் என கேட்க வேண்டும்" என மிகவும் கோபமாக பதில் அளித்து இருந்தார். இந்த சர்ச்சை குறித்து ஜெயாபச்சன் மட்டுமின்றி ஊர்மிளா மடோன்கர் மற்றும் தியா மிர்ஸே ஆகியோரும் அவர்களின் கருத்தை முன்வைத்துள்ளனர்.
அந்த எபிசொட் குறித்து எனக்கு தெரியாது அப்படி அது உண்மையாக இருப்பின் அது ஒரு மூர்க்கத்தனமான ஒரு செயல். அவர்களின் சீப்பான மனப்பான்மையை குறிக்கிறது. இது அவமரியாதையான வெறுக்கத்தக்க செயல் என அவர்களின் கருத்தை தெரிவித்து இருந்தனர்.
நெட்ஃப்ளிக்சே பொறுப்பு:
மேலும் இது குறித்து மிதுன் விஜயகுமார் தனது அறிக்கையில் " இது போன்ற செயல்களுக்கு நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டியது அவசியம். சமூகங்களின் கலாச்சார மதிப்புகள் மற்றும் உணர்வுகளுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும். ஸ்ட்ரீமிங் சேவை வழங்குபவர்கள் அவர்களின் கன்டென்ட் மீது கவனமாக இருப்பது அவசியம். அதை சரியாக கையாளும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் முன்வைக்கும் கன்டென்ட் இழிவான, புண்படுத்தும் அல்லது அவதூறான உள்ளடக்கம் கொண்டவை அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அவர்களுடையது. பிரபலமான நடிகை மாதுரி தீட்சித் மீது இப்படி ஒரு இழிவான வார்த்தை பயன்படுத்தப்பட்டது அவரின் கண்ணியத்தையும் மரியாதையும் புண்படுத்தும் காரியமாகும்" என தெரிவித்து இருந்தார்.