பால்கியுடன் எனது அடுத்த பயணம் - சூப்பர் அப்டேட் கொடுத்த பி.சி.ஸ்ரீராம்!
பிரபல இயக்குநர் பால்கியுடன் தான் தனது அடுத்த திரைப்படம் என்று பி.சி.ஸ்ரீராம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.சி.ஸ்ரீராம் தனது அடுத்த படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குநர் பால்கியுடன் தான் தனது அடுத்த திரைப்படம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகும் என்றும் கூறியுள்ளார். பால்கி, பிரபல பாலிவுட் இயக்குநரான இவர் வெகு சில படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் என்றபோதும் மிகசிறந்த படங்களை பாலிவுட் உலகிற்கு கொடுத்துள்ளார்.
My next project with Balki will have Dulquer Salman.
— pcsreeramISC (@pcsreeram) May 25, 2021
Its a psychological thriller .
Eagerly waiting to start work.#RBalki@dulQuer pic.twitter.com/g0C7AKHoMf
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் தபு நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான 'சீனி கும்' என்ற படத்தின் மூலம் அவர் இயக்குநராக களமிறங்கினர். மேலும் அமிதாப்பச்சனின் 'பா', ஷமிதாப், அக்ஷய் குமாரின் பேட் மேன் போன்ற சிறந்த பல படங்களை அவர் இயக்கியுள்ளார். இறுதியாக அக்ஷய் குமார் நடிப்பில் உருவான மிஷன் மங்கள்யான் என்ற படத்தில் எழுத்தாளராக அவர் பணியாற்றியனர். இந்நிலையில் அவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக களமிறங்குகிறார் பி.சி.ஸ்ரீராம். இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். பி.சி. ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல இந்திய மொழி திரைப்படங்களிலும் பிரபலமான ஒரு ஒளிப்பதிவாளர் என்பது பலரும் அறிந்ததே. 1981ம் ஆண்டு வெளியான வா இந்த பக்கம் என்ற தமிழ் படத்தின் மூலம் அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
மௌன ராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், தேவர் மகன், காதலர் தினம், குஷி மற்றும் வரலாறு போன்ற பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். நாயகன் படத்தில் பணியாற்றியதற்காக இவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் 1992ம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான மீரா, உலக நாயகன் கமலின் குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் என்ற மூன்று திரைப்படங்களை இவர் இயக்கியுமுள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.
பி.சி.ஸ்ரீராம் ஏற்கனவே இயக்குநர் பால்கியின் பா, ஷமிதாப், பேட் மேன் மற்றும் கிகா ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது அவருடைய அடுத்த படத்திலும் பணியாற்றவுள்ளார்.