Thalapathy Vijay: கட்சி பெயரை மாத்துங்க விஜய் .. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை!
நடிகர்களுக்கு எதற்கு இந்த அரசியல் என்ற கேள்வி பலருக்கு எழலாம். யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர ஆசைப்படலாம். அதை குறை சொல்ல முடியாது.
விஜய் சினிமாவில் இருந்து விலகுவது வருத்தமாக உள்ளது என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவரது அரசியல் வருகை தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்துகளை பேசியுள்ளார். அதில், “விஜய் நல்ல சம்பாதிப்பவர். அவர் மக்கள் இயக்கம் மூலமாக செய்த உதவிகளை நான் தவறாக பார்க்கவில்லை. மதத்தையும், ஜாதியையும் வச்சு மக்களை மயக்குவதற்கு பதில் நேர்மையான விஷயங்களை இளைஞர்களை உற்சாகப்படுத்துவது வசீகரிப்பது தவறில்லை. அவரை நடிகராக நமக்கு தெரியும். அரசியல்வாதியா என்ன பண்ணப் போறாருன்னு எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
விஜய் சினிமாவில் இருந்து விலகுவது வருத்தமாக உள்ளது. அவரை நம்பி இருந்த தயாரிப்பாளர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் வர்த்தக ரீதியாக இழப்பு தான். ஆனால் ரொம்ப வயதாகி வாய்ப்புகள் குறைந்து ஒருவர் இன்னொரு துறைக்குள் போகாமல் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது எல்லாத்தையும் விட்டுட்டு போறாருன்னு சொல்றப்ப வியப்பாகவே உள்ளது. அரசியலில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ளப் போவதை நான் தியாகமாகவே பார்க்கிறேன். ஏதோ ஒரு உந்துதல் விஜய்க்குள் உள்ளது.
விளையாட்டு ஒரே மாதிரி இருந்தாலும் அதில் ஆட்டத்தின் பாணியை மாற்றக்கூடிய ஒருவர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருக்கிறார். அதேபோல் அரசியலிலும் புதிய எண்ணம், மாற்றத்தை கொண்டு வர விஜய் வருவார். அடிப்படை அரசியலில் அவரது வாழ்க்கை இருந்திருந்தாலும் மாற்றுவதற்கு ஏதோ ஒன்று உள்ளது என்று அவருக்கு தோன்றியுள்ளது. நடிகர்களுக்கு எதற்கு இந்த அரசியல் என்ற கேள்வி பலருக்கு எழலாம். யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர ஆசைப்படலாம். அதை குறை சொல்ல முடியாது.
விஜய் வாக்காளர்கள், ரசிகர்கள் வேறு வேறு என்பதை தெரிந்து கொள்ளாமலா அரசியலுக்கு வந்திருப்பார். தான் இழப்பது அதிகம் என்பது தெரிந்து வருவார் என்றால் சேவை தானே விஜய்க்கு மேலோங்கி இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பான காலக்கட்டத்தில் விஜய் குறித்த எண்ணம் மக்களுக்கு தெரிந்து விடும்.
அரசியலில் குதிப்பவர்களை உடனடியாக ஆட்சியில் அமர வைக்கப்போவது மக்களின் முடிவு தான். கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு கலக்கம் ஏற்பட்டிருக்கலாம். விஜய் தனக்கு இருக்கும் புகழ் அந்தஸ்தை எப்படி அரசியல் செல்வாக்காக மாற்றப் போகிறார் என்பதை கொள்கைகள் மூலம் மக்களை கவர்கிறார் என்பதை பொறுத்தது. விஜய் தேசிய கட்சிகளின் பி டீம் ஆக இருப்பார் என சொல்லப்படுவது அவர் மட்டுமல்ல யார் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் வரும்.
தமிழக வெற்றி கழகத்தின் அறிக்கையில் நிறைய பிழைகள் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் பதிலுக்கு திமுகவின் அறிக்கையிலும் பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் விஜய் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் என்பதற்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகம் என மாற்ற வேண்டும். மொழியில் பிழை என தெரியும் போது அதை சரிசெய்யாமல் மொழியை காக்க திராணி இல்லாதவர் எப்படி மொழியை பேசும் மக்களை காப்பார் என்பதற்கு அவரிடம் விடையே இல்லை. இதனை அவர் மாற்றி தான் ஆக வேண்டும். மாற்றவில்லை என்றால் அது மிகப்பெரிய தவறாக மாறும்.
உங்களை ஜோசப் விஜய் என பாஜகவின் ஹெச்.ராஹா அடையாளம் காட்டிய போது, ஆமாம் அது நான் தான் என அறிக்கை விட்டு தெளிவான தன்னுடைய நிலைபாட்டை சொன்னவர். இப்போது மட்டும் குங்குமத்தை வைத்துக் கொண்டு வந்த நின்றால் அப்போது நீங்களும் முகமூடி அரசியலுக்குள் வந்து விட்டீர்களா? எனவும் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.