Bhavatharini: "அவரோட குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும்" - பவதாரிணி இறப்பு குறித்து கலங்கும் திரையுலகம்
இளையராஜா மகள் பவதாரிணியின் இறப்புக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இன்று காலமானார். இவருக்கு வயது 47. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி பிறந்தார்.
தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளையராஜா மகளின் மரணம்:
பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இன்று மாலை 5.30 மணிக்கு அவர் காலமானதாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றதாகக் கூறப்படுகிறது. நாளை சென்னைக்கு விமானம் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட உள்ளது. இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜாவும் இலங்கையில் உள்ளார்.
தந்தை இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோரது இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இவரது குரலில் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் பாரதி படத்தில் வரும் மயில்போல பொண்ணு ஒன்னு பாடலும், ராமன் அப்துல்லா படத்தில் இடம் பெற்றுள்ள என் வீட்டு ஜன்னல் வழி ஏன் பாக்குற பாடலும் இவரின் புகழை பட்டித் தொட்டி எங்கும் எடுத்து சென்றது.
"என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்"
பவதாரிணியின் இறப்புக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "இந்த செய்தி அதிர்ச்சியை தருகிறது. அவரது குரல் மிகவும் மென்மையானது. தனித்துவமானது" என்றார்.
இசையமைப்பாளர் தினா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "இது, துக்கமான செய்தி. சின்ன வயதில் அவர் விட்டு பிரிந்தது ஏற்கவே முடியாதது. எல்லாரையும் கவர்ந்த குரல். அனைவருக்கும் பிடித்த குரல். அதில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
என் நண்பனுக்கு
— Bharathiraja (@offBharathiraja) January 25, 2024
எப்படி ஆறுதல்
சொல்வேன்..
மகள் பவதாரிணியின்
மறைவு, எங்கள்
குடும்பத்தினருக்கு
ஈடு செய்யமுடியாத
பேரிழப்பாகும்.@ilaiyaraaja pic.twitter.com/TvQ6xxuSLz
இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட இரங்கல் செய்தியில், "என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்" என தெரிவித்துள்ளார்.