Modern Love Chennai: மாடர்ன் லவ்: எப்படி இருக்கு 'காதல் என்பதே கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி' எபிசோட்?
"காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி" எபிசோடில் முதன்மை நாயகியாக ரித்து வர்மா, வைபவ், சுஜாதா பாபு, சம்யுக்தா விஸ்வநாதன், ரவி பட், சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.
'மாடர்ன் லவ் சென்னை' என்ற ஆந்தாலஜி படத்தில் கிருஷ்ணக்குமார் ராம்குமார் இயக்கியுள்ள எபிசோட் "காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி". இந்த எபிசோடில் முதன்மை நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் வைபவ், சுஜாதா பாபு, சம்யுக்தா விஸ்வநாதன், ரவி பட், சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை
சினிமா படங்களை பார்த்து பார்த்து அதில் வரும் காதல் காட்சிகளைப்போல் தன் வாழ்வில் வரும் காதலும் இருக்கும் என கனவு காணும் நாயகி ரித்து வர்மா அந்த மாயையில் இருந்து எப்படி மீண்டார் என்பதே இதன் சுருக்கமாகும். பள்ளி காதல், வேலை பார்க்கும் இடத்தில் காதல், டேட்டிங் செயலி மூலம் காதல், கடைசியில் உண்மையில் ரொமான்டிக் என்றால் என்ன என்பதை அழகாக விளக்கியிருக்கிறார்கள்.
அதே சமயம் சினிமா எவ்வளவு பாதிப்பை மக்களிடத்தில் குறிப்பாக யுவ, யுவதிகள் இடத்தில் ஏற்படுத்தும் என்பதை காமெடியாக சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். ஏமாற்றுவது, ஜாதி பார்த்து காதல் செய்வது, சொந்தத்தில் என்ன உறவு என்றே தெரியாமல் காதல் கொள்வதை என சமூகத்தில் நாம் தினம் தினம் காணும் அனைத்தையும் இதில் சொல்லி இருக்கிறார்கள். நாம் ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்த, எந்த மாதிரியான பிரபலங்களைப்போல் நடிப்போம் என்பதை, எப்படியான மாயையில் சிக்கி உள்ளோம் என்பதையும் அழகாக காட்சிப்படுத்தி உள்ளார்கள்.
நடிப்பு எப்படி?
படம் முழுக்க ஹீரோயின் ரித்து வர்மாவுடன்தான் பயணிக்கிறது. காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும் ஏதோ ஒரு திரைப்படத்தின் பாதிப்பு என்பதை நாம் உணரும்போது அடுத்து என்ன வரப் போகிறது என்பதை இன்னும் எதிர்பார்ப்பை நமக்குள் ஏற்படுத்தி விடுகிறது. சினிமாவும் நிஜ வாழ்க்கையும் எப்படிப்பட்டது என விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் தெரிவிக்கும் இடம் அழகாக உள்ளது.
படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தனக்கான கேரக்டரை சரியாக செய்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது. காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமும் எதுவாக இருந்தாலும் மனசு ஒத்துப் போனால் தான் ரொமான்ஸ் வரும் என்பதை சற்றே மெதுவான திரைக்கதை உடன் சொல்லி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதைக்கு ஏற்றபடி ஆங்காங்கே பிற படங்களின் பாடல்களையும் இசையையும் அவர் பயன்படுத்தி இருப்பது ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் இது தமிழ் சினிமாவை கிண்டல் செய்யும் மிர்ச்சி சிவாவின் 'தமிழ் படம்' வகையா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.