சுய சாதி பெருமை பேசுகிறதா பைசன்...மாரி செல்வராஜ் சொல்ல வருவது என்ன?
மாரி செல்வராஜின் பைசன் படத்தை ஒரு சிலர் சாதிய சாயம் பூசிவரும் நிலையில் மக்கள் இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்துள்ளார்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் அமீர் நடித்த பசுபதி பாண்டியராஜன் கதாபாத்திரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. தனது சுய சாதி பெருமையை மாரி செல்வராஜ் பேசுவதாக அவர் மீது சமூக வலைதளங்களுல் சில விமர்சனம் வைத்து வருகிறார். பசுபதி பாண்டியன் கதாபாத்திரம் வழியாக மாரி செல்வராஜ் என்ன சொல்ல வருகிறார் ?
சுய சாதி பெருமை பேசிகிறதா பைசன் ?
பைசன் படத்தில் துருவ் விக்ரம் , பசுபதி , அமீர் , லால் , அருவி மதன் , அனுபமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அர்ஜூனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி தனது சொந்த அனுபவங்களை சேர்த்து இப்படத்தை இயக்கியுள்ளார் பைசன். தென் மாவட்டங்களில் நிலவும் வன்முறை , சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் ஒரு கபரி வீரன் சர்வதேச அளவில் சாதிப்பதே பைசன் படத்தின் கதை. இன்னொரு பக்கம் தனது மகனை இந்த வன்முறை களத்தில் இருந்து எப்படியாவது கரை சேர்த்துவிட என்கிற ஒரு தந்தையின் தவிப்பும் இப்படத்தின் கதை. ஒன்றிணைந்த திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் 90 களில் பிரபலமாக இருந்த பசுபதி பாண்டியன் மற்றும் வெங்கடேச பண்ணையார் மோதலும் இப்படத்தில் கிளைக்கதையாக இடம்பெற்றுள்ளது. இருதரப்பினர் இடையே தொடரும் மோதல் , இருபக்க தரப்பினரும் மாற்றி மாற்றி கொலை செய்யப்படுவது தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. பசுபதி பாண்டியன் கதாபாத்திரத்தில் அமீர் சிறப்பாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தின் வழி மாரி செல்வராஜ் தனது சொந்த சாதி பெருமையை பேசுவதாக ஒரு சிலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து பைசன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என புலம்பி வருகிறார்.
மாரி செல்வராஜ் சொல்ல வருவது என்ன ?
இரு சாதி தலைவர்களை படத்தில் காட்டியிருந்தாலும் தனது நிலைபாட்டை மிக தெளிவாக கையாண்டுள்ளார் மாரி செல்வராஜ். பாண்டியராஜனை நாயகன் துருவு முதல் முறை பார்க்கும்போதே ஒரு கொலைகாரனாக பார்க்கிறார். தன் தந்தை சொன்னது போல் பாண்டியராஜன் நல்லவர் இல்லையா என்கிற கேள்வியே அவனுக்குள் வருகிறது. நல்லவராக இருப்பவர் எப்படி இப்படி கொலை செய்ய முடியும் என்பது தான் அவனது குழப்பம். மறுபக்கம் லால் நடித்துள்ள வெங்கடேச பண்ணையார் கதாபாத்திரமும் துருவின் விளையாட்டு திறமையைப் பார்த்து அவனை வளர்த்துவிடவே நினைக்கிறார். அங்கும் மற்றவர்கள் தன்னை சந்தேகமாக பார்ப்பதை துருவால் புரிந்துகொள்ள முடியவில்லை. தான் பிறப்பதற்கு உருவான சாதியால் தன்னை எப்போதும் விலக்கிப் பார்க்கும் சமூகம் அவனது மனதில் பெரிய கசப்பாக திரள்கிறது.
சம உரிமைகளுக்காக வன்முறையை கையில் எடுக்கும் பாண்டியராஜன் தான் எதற்காக கத்தியை கையில் எடுத்தோம் என்பதை தன்னை ஆதரிப்பவர்களே மறந்துவிட்டு குடும்ப பெருமை பேசுகிறார்கள் என ஒரு காட்சியில் சொல்கிறார் . இன்னொரு பக்கம் லால் தனக்கு இந்த சமூகத்தில் கிடைத்த உயர்ந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக வன்முறையை கையில் எடுத்தேன். ஆனால் இப்போது அதில் தான் மாட்டிக்கொண்டுவிட்டதாக சொல்கிறார். இவற்றுக்கு நடுவில் வன்முறை மட்டுமே தீர்வாக முன்வைக்கப்படும் நிலத்தில் இருந்து தனது மகனை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்பது ஒரு தந்தையின் போராட்டத்தையே பைசன் படம் பேசுகிறது. இதில் சுய சாதி பெருமை எங்கு இருக்கிறது ?





















