‘ரஜினி பயந்துட்டார்’ - எந்திரன் பட அனுபவங்களைப் பகிர்ந்த மனோஜ் பாரதிராஜா!
எந்திரன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் மனோஜ் பாரதிராஜா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எந்திரன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் மனோஜ் பாரதிராஜா பகிர்ந்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் படம் மூலமாக அறிமுகமானார் மனோஜ். அந்தப் படத்தில் மிகப்பிரபலமான ஈச்சி எலுமிச்சி எனும் பாடலையும் பாடியுள்ளார். அதற்குப் பிறகு கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகளைத் தொடர்ந்து சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஹிட்டான வெங்கட் பிரபு இயக்கி சிம்பு நடித்த மாநாடு படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். எந்திரன் படம் 2010ம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்ட்டர் ஹிட் ஆன படம். இந்த படத்தில் இயக்குநர் ஷங்கருக்கு உதவி இயக்குநராக பாரதிராஜாவின் மகனான மனோஜ் பணியாற்றியுள்ளார். ரஜினியின் டூப் கதாபாத்திரமாகவும் சில சீன்களில் நடித்துள்ளார். அந்த அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
எந்திரன் ஷூட்டிங்கின் போது ரஜினியுடனும், ஐஸ்வர்யா ராயுடனும் நிறைய வேடிக்கையான தருணங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார். அதில் முக்கியமான ஒன்று பென்ஸ் காரில் ஐஸ்வர்யா பின் சீட்டில் இருக்கும்படி பயணிக்கும் சீன். அதில் ரஜினியின் டூப் ரோலாக மனோஜ் நடித்தார். அப்போது ஒரு பக்கம் ப்ரஃபசரான வசீகரனும், இன்னொரு பக்கம் டிரைவர் சீட்டில் சிட்டி ரோபோவும் இருப்பார்கள். சிட்டியாக ரஜினி கார் ஓட்டும்போது, அருகில் வசீகரனுக்கு டூப்பாக மனோஜ் நடித்தபோது வானம் மட்டும் தெரியும்படி தாழ்வாக அமர்ந்திருக்கிறார். அதுவுமில்லாமல் கண்ணாடி போடும் பழக்கமுடையவர் மனோஜ். எனவே கண்ணாடி இல்லாமல் நடிக்கும் சீன் என்பதால், ஷாட்டுக்கு முன்பாக மேக்கப் மேன் ரஜினியிடம் கண்ணாடி கழற்றினால் மனோஜுக்கு கண் தெரியாது என விளையாட்டாக சொல்லிவிடவே, கொஞ்சம் பதறிவிட்டாராம் ரஜினி. அதை மனதில் கொண்டே, ஷீட்டிங்கின்போது அருகிலிருக்கும் தன்னையும், சாலையையும் பார்த்து பார்த்து ஒட்டினார் என எந்திரன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
உங்களுக்கு யாரை இயக்க விருப்பம் என்ற கேள்விக்கு அப்படி தனிப்பட்ட முறையில் யாரையும் தேர்வு செய்து வைத்துவிடவில்லை. கதையின் போக்கை பொறுத்துதான் தேர்வு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். 5 முதல் 6 வரை ஸ்க்ரிப்ட்டுகளை தற்போது தன் வசம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் ஒரே வகையிலான கதைகளா என கேட்டபோது, இல்லை, வெவ்வேறு வகையை சேர்ந்தவை. அதில் 2 த்ரில்லர் கதைகளாக வைத்துள்ளதாகவும் அதில் ஒன்று உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு அருகே ஒரு கிராமத்தில் நடந்த அந்த உண்மைக் கதையை பெரும்பாலானவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.