Box Office Collection: லால் சலாம், லவ்வர் படங்களில் 4 நாள் வசூல் நிலவரம்: பாக்ஸ் ஆஃபிஸை தனதாக்கினாரா ரஜினிகாந்த்?
Box Office Collection: லவ்வர் மற்றும் லால் சலாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தைப் பார்க்கலாம்.
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான லால் சலாம் மற்றும் லவ்வர் ஆகிய இரு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனைப் பார்க்கலாம்.
லவ்வர் Vs லால் சலாம்
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய படங்கள் லவ்வர் (Lover Movie) மற்றும் லால் சலாம் (Lal Salaam). இரு படங்களுக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், இரு படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் சாக்னிக் தளம் வெளியிட்டுள்ளது.
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் லால் சலாம் படத்தின் ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள். லால் சலாம் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வந்துகொண்டிருக்கும் நிலையில், படத்தில் ரஜினியின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். சாதி, மத பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையை இப்படம் வலியுறுத்தியுள்ளது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
வசூல் நிலவரம்
லால் சலாம் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ. 3.55 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில்ரூ. 3.25 கோடியும், 3ஆவது நாளில் ரூ. 3.15 கோடியும் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து நான்காவது நாளான நேற்று பிப்ரவரி 12ஆம் தேதி ரூ. 1.24 கோடிகளை வசூலித்தது. நான்காவது நாளில் லால் சலாம் படத்தின் வசூல் தொய்வடைந்ததைத் தொடர்ந்து இன்று ஐந்தாவது நாளாக படம் ரூ. 42 லட்சம் வரை வசூல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லவ்வர்
குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம், ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வேலண்டைன்ஸ் வார ஸ்பெஷலாக இப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் லவ்வர் படம் இளம் தலைமுறையினர் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
வசூல் நிலவரம்
லவ்வர் படம் முதல் நாளில் ரூ.70 லட்சம் வசூல் செய்தது. தொடர்ந்து 2 ஆவது நாளில் ரூ. 1 கோடியும், 3ஆவது நாளில் ரூ.99 லட்சமும் வசூல் செய்தது. நான்காவது நாளாக நேற்று ரூ.36 லட்சம் படம் வசூலித்துள்ளது. இன்று பிப்ரவரி 13ஆம் தேதி வசூல் பாதியாகக் குறையலாம் என எதிர்பார்ப்படுகிறது. மேலும் நாளை காதலர் தினத்தன்று இப்படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.