Rohini Theatre: ”இனிமேல் ஆக்ஷன் தான்.. கொஞ்சம் கூட எங்களை யோசிக்கவில்லை” .. ரசிகர்களுக்கு ரோகிணி தியேட்டர் எச்சரிக்கை..!
கண்டிப்பாக இனிமேல் படங்களின் கொண்டாட்டங்கள் எல்லாம் சிறிய அளவிலேயே நடைபெறும் என ரோகிணி தியேட்டரின் நிர்வாக இயக்குநர் ரேவந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக இனிமேல் படங்களின் கொண்டாட்டங்கள் எல்லாம் சிறிய அளவிலேயே நடைபெறும் என ரோகிணி தியேட்டரின் நிர்வாக இயக்குநர் ரேவந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “லியோ” படத்தின் ட்ரெய்லர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணியில் 2வது முறையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக தியேட்டர்களில் படங்கள் ரிலீசாகும் போது நடைபெறும் கொண்டாட்டங்கள் தவிர்த்து பாடல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ட்ரெய்லர், டீசர் என வெளியிட்டாலும் கொண்டாட்டங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதில் சில நேரங்களில் ரசிகர்களாள் தியேட்டர்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் மிக பிரபலமான தியேட்டர்களில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் ட்ரெய்லர் கொண்டாட்டத்துக்கு சென்ற ரசிகர்கள் அங்கிருந்த இருக்கைகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒருதரப்பு தியேட்டர் நிர்வாகம் மேலும், இன்னொரு தரப்பு ரசிகர்கள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து.
இப்படியான நிலையில் ரோகிணி தியேட்டரின் நிர்வாக இயக்குநர் ரேவந்த் சரண் நேர்காணல் ஒன்றில் நடந்த சம்பவங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “அதிக கூட்டம் கூடும் இடத்தில் நாம் மக்கள் கிட்ட எடுத்து சொல்ல தான் முடியும். எப்படி பொது இடத்துல மத்தவங்களுக்கு தொந்தரவு தராம, பொது சொத்துகளை சேதப்படுத்தாம நடந்துக்கனும்ன்னு அவங்களுக்கு தான் தெரியணும். நாம ஒரு சுதந்திரம் கொடுக்கிறோம் என்றால், அதை எந்தளவு எடுத்துக்க வேண்டும் என்பது உள்ளது. சுதந்திரம் கட்டுப்பாடுடன் இருக்கும்போது தான் அதனை அமைதியான மனநிலையில் உற்சாகமாக கொண்டாட முடியும். அந்த சம்பவத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு இப்படி ஒரு சுதந்திரம் கொடுக்க வேண்டுமா என்ற எண்ணம் வந்துவிட்டது. ஏற்கனவே இப்படி நடந்திருந்தாலும், மீண்டும் இப்படி நடக்கும் போது, நம்முடைய சொத்துக்களை சேதப்படுத்தும்போது இந்த அளவுக்கு இடம் கொடுக்க வேண்டுமா என்ற எண்ணம் உள்ளது.
கண்டிப்பாக இனிமேல் கொண்டாட்டங்கள் எல்லாம் சிறிய அளவிலேயே நடைபெறும். 100 பேர் இருக்கும் இடத்தில் 10 பேர் செய்யும் தவறுகள் மீதமுள்ள 90 பேரை பாதிக்கிறது. அதனால் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது. சீட் உடைந்தது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அதனை சரி செய்யவே 3 வாரம் ஆகிவிட்டது. அதனால் லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சி மெயின் ஸ்கிரீனில் படம் திரையிடப்படுமா என்பதே கேள்விக்குறி தான்.
நாங்கள் கொஞ்சம் முன்னாடியே கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும். முன்னதாக வாரிசு, துணிவு ரிலீஸ் அப்பவே இப்படியான சம்பவங்கள் நடந்தது. அதன்பிறகு கொஞ்சம் சுமூகமாகவே சென்றது. இப்ப நடந்ததை பார்க்கும் போது உள்ளே அனுமதி அளித்ததில் கட்டுப்பாடுகள் விதித்திருக்கலாம் என தோன்றுகிறது.
இந்த முறை அதிக பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் இல்லாமல் உள்ளே நுழைய முயல்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளோம். இதுக்குமேல எங்களால சமாளிக்க முடியல. சின்ன பிரச்சினை என்றாலும் கடுமையான நடவடிக்கை தான். நாங்க இதுவரை ரசிகர்கள், ரசிகர்கள் என பார்த்துவிட்டோம். ஆனால் அவர்கள் எங்களை கொஞ்சம் கூட யோசிப்பதில்லை" என தெரிவித்துள்ளார்.