(Source: ECI/ABP News/ABP Majha)
Dulquer Salman: அப்பாவுக்கு அடுத்து இவரைதான் ரொம்ப பிடிக்கும்.. துல்கர் சல்மானுக்கு பிடித்த இரண்டு நடிகர்கள் யார் தெரியுமா?
தனது தந்தை மம்மூட்டியைத் தவிர நடிகர் துல்கர் சல்மானுக்குப் பிடித்த இரண்டு நடிகர்கள் யார் தெரியுமா?
கிட்டத்தட்ட ஓராண்டு காலாத்துக்குப் பிறகு துல்கர் சல்மான் நடித்துள்ள இரு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்துக்கு பின் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் கேங்ஸ்டர் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’.
தற்போது இந்தப் படத்தின் புரோமோஷனில் பிஸியாக இருந்து வரும் துல்கர், தனக்குப் பிடித்து நடிகர்கள் பற்றியும், ஒரு நடிகராக இருப்பதன் சாதக பாதகங்களைப் பற்றியும் மனம் திறந்துள்ளார்.
அப்பாவைத் தவிர பிடித்த நடிகர்கள்!
தனது தந்தை மற்றும் மலையாள சூப்பர் ஸ்டரான நடிகர் மம்மூட்டியை ஒரு ஃபேன் பாயாக ரசிப்பவர் துல்கர் சல்மான். இந்நிலையில், தந்தையைத் தவிர அவருக்குப் பிடித்த இரண்டு நடிகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார். ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர்களாக பிராட் பிட் - மேத்யூ மேக்னாகே ஆகிய இருவரை தனக்குப் பிடித்த நடிகர்களாக குறிப்பிட்டிருக்கிறார்.
“நான் மேத்யூ மேக்னாகே எழுதிய புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன். ஹாலிவுட்டில் மிக முக்கியமான நடிகராக இருக்கும் அவர் திடீரென்று ஆப்பிரிக்கா செல்கிறார். தனது வாழ்க்கையில் அனுபவங்களைத் தேடிச் சென்றுகொண்டே இருப்பவர் அவர். அந்த அனுபவங்களை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார் “ என்று கூறியிருக்கிறார் துல்கர்.
நடிகனாக இருப்பது
ஒரே நேரத்தில் மலையாளத்தில் கம்மட்டிப்பாடம் மற்றும் தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படங்களில் நடிக்கும் வாய்ப்பு துல்கர் சல்மானுக்கு கிடைத்தது. இதில் ஏதாவது ஒரு படத்தை, தான் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு வந்தது.
ஆனால் இரண்டு படங்களிலும் துல்கர் நடித்த நிலையில், இது பற்றி மனம் திறந்துள்ளார். “கம்மட்டிப்பாடம் மாதிரியான ஒரு படத்தில் நடிப்பதை நான் ரசித்தேன். ஆனால் அதே நேரத்தில் மணிரத்னத்தின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை என்னால் இழக்க முடியாது.
நான் கம்மட்டிப்பாடம் இயக்குநர் ராஜீவ் ரவியிடம் சென்று என்னுடைய படப்பிடிப்பு தேதிகளில் சில மாற்றங்கள் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் இப்படி என்னால் நடிக்க முடிந்தது. ஒரு நடிகனாக, மக்களை மகிழ்விக்கிறோம் என்பதுதான் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்கக்கூடிய அதிகபட்ச இன்பம். ஆனால் அதே நேரத்தில் இந்தத் துறையில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிச்சயமின்மை எல்லாம் சேர்ந்து நடிகனாக இருப்பதை சவாலாக மாற்றுகின்றன” எனப் பேசியுள்ளார்.
கிங் ஆஃப் கோதா
இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் - வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இப்படத்துக்கு இசை அமைத்துள்ளனர். மற்றொரு பக்கம் துல்கர் சல்மான் முதல் முறையாக நடித்திருக்கு இணையத் தொடர் கன்ஸ் & குலாப்ஸ். வருகின்ற செப்டம்பர் 18-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.