5 மாதங்களில் ரூ.1000 கோடி குவித்த மலையாள திரைத்துறை... திணறும் பாலிவுட், கோலிவுட், டோலிவுட்
பிற திரைத் துறைகள் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றிப் படங்களை கொடுக்க தடுமாறி வரும் நிலையில் மலையாள சினிமாக்கள் உலகளவில் ஐந்தே மாதங்களில் 1000 கோடி வசூலை ஈட்டியுள்ளன.
வசூல் மழையில் மலையாள சினிமாக்கள்
இந்தியத் திரைத் துறையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மலையாள படங்களே இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் மற்ற தமிழ் , இந்தி , மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று திரைத்துறைகளில் சொல்லிக் கொள்ளும் படி எந்த படமும் பெரியளவில் வெற்றிபெறவில்லை. அதே நேரம் இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் , பிரேமலு, பிரமயுகம், ஆடு ஜீவிதம், ஆவேஷன் என அடுத்தடுத்தப் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. விளைவாக இந்திய சினிமாவில் அதிக 1000 கோடி வசூல் இலக்கை மலையாள சினிமா எட்டியுள்ளது.
1000 கோடி வசூல் ஈட்டிய மலையாள திரைத் துறை
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 2018 , கன்னூர் ஸ்குவாட், ஆர்.டி.எக்ஸ், ரொமான்ச்சம் மற்றும் நேரு உள்ளிட்டப் படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றி கண்டன. இதன் விளைவாக மலையாள படங்கள் உலகளவில் 500 கோடி வசூல் ஈட்டியதாக மாத்ருபுமி தகவல் வெளியிட்டது. இந்த வசூல் எண்ணிக்கை இந்த ஆண்டு இருமடங்காக பெருகியுள்ளது. சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் குருவாயூரம்பளா நடையில் படம் வெளியாகியது. இப்படம் வெளியாவதற்கு முன்பு வரை மலையாள படங்கள் ஜவனரி முதல் ஏப்ரல் மாதம் வரை உலகளவில் ரூ.985 கோடி வசூலித்திருந்தது. மே மாதம் வெளியான ’குருவாயூரம்பளா நடையில்’ படம் உலகளவில் ரூ.30 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படத்தின் வசூலை சேர்த்து வரலாற்றில் முதல் முறையாக ரூ.1000 கோடி வசூல் இலக்கை மலையாள திரையுலகம் எட்டி சாதனைப் படைத்துள்ளது.
இதில் மஞ்சுமெல் பாய்ஸ் படம் ரூ.249.94 கோடியும் , ஆடு ஜீவிதம் ரூ.157.44 கோடியும் , ஆவேஷம் படம் ரூ.153,52 கோடியும் வசூலித்துள்ளன. இந்த மூன்று படங்கள் மட்டுமே இந்த ரூ.1000 கோடியில் 55 சதவிதம் வசூலை ஈட்டிக் கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெற்றிக்குத் திணறும் பாலிவுட் , கோலிவுட் , டோலிவுட்
தமிழில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர் , லால் , சலாம் , அயலான் , லவ்வர் போன்ற படங்கள் ஓரளவிற்கு திரையரங்கத்திற்கு மக்களை அழைத்து வந்தன. இதனைத் தவிர்த்து விஜயின் கில்லி படம் மறுவெளியீட்டு செய்யப் பட்டு 20 கோடிவரை வசூல் ஈட்டியது. இந்தப் படங்கள் தவிர்த்து பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாததும் இந்த பின்னடைவிற்கு காரணமாக கருதப் படுகிறது.
அதே நேரம் பாலிவுட் சினிமாவில் இந்த ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ஃபைட்டர் படம் ரூ.358.89 கோடி, ஷைத்தான் ரூ.213.64 கோடி வசூலித்துள்ளன. கடந்த ஆண்டு ஷாருக் கான் நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்த ரூ.1000 கோடி வசூல் ஈட்டிய நிலையில் இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான படங்கள் வெற்றிக்குத் திணறி வருகின்றன. அதே நேரம் தெலுங்கு சினிமாத் துறையிலும் இந்த ஆண்டு வெளியான தில்லு ஸ்கொயர் , குண்டூர் காரம் உள்ளிட்ட ஒரு சில படங்களைத் தவித்து மற்ற படங்கள் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. சிறிய பட்ஜெட்களில் படங்களை தயாரித்து மிகப்பெரிய வசூல் இலக்குகளை எட்டும் மலையாள சினிமா இந்திய சினிமாத் துறைக்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது.