Keerthi Suresh - Maamannan : நான் ஒரு கம்யூனிஸ்ட்.. மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கீர்த்தி அதிரடி..
”படப்பிடிப்புதான் ஜாலியா இருந்துச்சே தவிர, படம் அப்படி இருக்காது” என நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.

பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு , உதயநிதி ஸ்டாலின் , ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இந்த படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியநிலையில் செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. 110 நாள்கள் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இந்த மாதம் 29-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன், பா. ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், எச்.வினோத், முருகதாஸ், விஜயகுமார், விஜய் ஆண்டனி, நாஞ்சில் சம்பத், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, தேனாண்டாள் முரளி, கே.ராஜன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அப்போது படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் திறந்தார். விழாவில் பேசிய அவர், ”ரொம்ப சந்தோஷமா இருக்கும். மாமன்னன் ஒரு பெரிய படம். ரொம்ப நாள் கழிச்சு தமிழில் என் படம் ரீலிஸ் ஆகுது. இந்த படத்தில் உதய சார், மாரி சார், பகத், வடிவேல் சார்,ரஹ்மான் சார் என்ற பெரிய கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளது. மாமன்னன் படத்தில் நானும் இவங்களோட இருந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எல்லாரும் கண்டிப்பா இந்த படத்தை தியேட்டர்ல பாருங்க. சப்போர்ட் பண்ணுங்க.
இந்த படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட். இதுல மத்த படங்களில் நான் டான்ஸ் ஆடுன மாதிரி எல்லாம் இந்த படத்தில் ஆடவில்லை. இந்த படம் முழுக்க முழுக்க வேறு மாதிரியான படம். எல்லாருக்கும் இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்குறேன்.
மாமன்னன் படத்தில் பகத் சாருடன் எனது கதாபாத்திரம் கம்மி. ஆனா, இந்த பக்கம் வடிவேலு சார், உதய சார் கூட நடிக்குறப்ப ரொம்ப ஜாலியா இருந்துச்சு. படப்பிடிப்புதான் ஜாலியா இருந்துச்சே தவிர, படம் அப்படி இருக்காது” என தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் சிலர் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஏன், என்னை கல்யாணம் பண்ணி கொடுக்குறதுலையே இருக்கீங்க. நடக்குற டைம் நானே சொல்றேன். படத்தில் ரஹ்மான் சார் சிறப்பா இசை அமைச்சு அதுல வடிவேல் சார் பாடியிருக்காரு. அது என்னுடைய பேவரைட். அதேபோல, படத்துல எனக்கு ஒரு சோலோ பாட்டு இருக்கு அதுவும் என் பேவரைட்” என பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

