Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது இரண்டாவது மின்சார காராக ஒரு எம்பிவியை களமிறக்க மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது.

Maruti Electric MPV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது இரண்டாவது மின்சார காரான எம்பிவியை, அடுத்த ஆண்டே மாருதி சுசூகி களமிறக்க வாய்ப்புள்ளதாம்.
மாருதி மின்சார எம்பிவி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ப்ராண்டின் முதல் மின்சார காரான, இ-விட்டாரா உட்பட பல கார்களை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஃப்ராங்க்ஸ் காம்பேக்ட் க்ராஸ் ஓவர், ப்ரேஸ்ஸா ஃபேச்லிஃப்ட் மற்றும் மின்சார குடும்ப கார் (கோட்நேம் - மாருதி YMC) ஆகியவையும் அடங்கும். உள்நாட்டு சந்தையில் ப்ராண்டின் இரண்டாவது மின்சார காராக YMC இருப்பதோடு, கியாவின் காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனுடன் போட்டியிட உள்ளது. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில், எர்டிகா மற்றும் XL6க்கு மேலே புதிய கார் நிலநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி YMC - என்ன எதிர்பார்க்கலாம்?
மாருதியின் புதிய மின்சார எம்பிவிக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகாவிட்டாலும், அடுத்த ஆண்டின் இறுதியில் இந்த கார் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இந்த காருக்கான உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி புதிய காரானது 27PL ஸ்கேட்போர்ட் ப்ளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட உள்ளது. இதே தளத்தில் தான் புதிய இ விட்டாராவும் கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பவர்ட்ரெயின் அம்சங்களை கருத்தில் கொண்டால், மாருதியின் புதிய YMC ஆனது இ விட்டாராவின் 49KWh மற்றும் 61KWh பேட்டரி ஆப்ஷன்களை கடன் வாங்கக் கூடும். இந்த ஆப்ஷன்களில் எஸ்யுவி ஆனது, சிறிய பேட்டரியில் 343 கிலோ மீட்டரும், பெரிய பேட்டரியில் 543 கிலோ மீட்டரும் ரேஞ்ச் அளிக்கும் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சார்ஜிங் நெட்வொர்க்:
இந்திய-ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனம் நாடு முழுவதும் 1,100க்கும் மேற்பட்ட நகரங்களில் 2,000க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் டீலர்கள் மற்றும் சார்ஜிங் பாயிண்ட் ஆபரேட்டர்களுடன் (CPOs) இணைந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட EV சார்ஜிங் நெட்வொர்க்கை அமைக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதன் மூலம், தனது மின்சார போர்ட்ஃபோலியோவை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்த மாருதி திட்டமிட்டுள்ளதை உணர முடிகிறது.
மாருதி 'இ ஃபார் மீ' செயலி
கூடுதலாக, மாருதி சுசுகி இ விட்டாரா அறிமுகத்திற்கு முன்னதாக 'இ ஃபார் மீ' மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலி, மாருதி சுசுகி சார்ஜிங் நிலையங்கள் மற்றும் கூட்டாளர்-இயக்கப்படும் நெட்வொர்க்குகள் இரண்டிலிருந்தும் சார்ஜிங் பாயிண்டுகளை அணுக பயனர்களுக்கு உதவுகிறது.
ஸ்மார்ட் ஹோம் சார்ஜர்களின் ரிமோட் கண்ட்ரோல், சார்ஜிங் பாயிண்டுகளைக் கண்டறிந்து அணுகுதல், ஒருங்கிணைந்த வீடு மற்றும் பொது சார்ஜிங் மேலாண்மை, UPI அல்லது மாருதி சுசுகி மணி வழியாக பணம் செலுத்துதல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழியாக காரில் உள்ள ஆப் மிரரிங் மற்றும் டீலர் அவுட்லெட்டுகள் மற்றும் ஹோம் சார்ஜிங் பாயிண்டுகளில் "டேப் N சார்ஜ்" கார்டு ஆதரவு போன்ற பல சேவைகளையும் இந்த செயலி வழங்குகிறது.





















