Vaali Anniversary : தன்னுயிர் பிரிவதை கவிதையில் கூறிய வாலிக்கு நினைவு அஞ்சலி
காற்று வாங்க போனேன் - ஒரு கவிதை வாங்கி வந்தேன் - அதை கேட்டு வாங்கிப் போனால் - அந்த கன்னி என்னவானாள்...........
காற்று வாங்க போனேன் - ஒரு
கவிதை வாங்கி வந்தேன் - அதை
கேட்டு வாங்கிப் போனால் - அந்த
கன்னி என்னவானாள்...........
என அந்த காலம் முதல் “ முன்பே வா என் அன்பே வா” என இந்த காலம் வரை காதலர்களின் கற்பனை பாடலை கொடுத்தவர் தான் கவிஞர் வாலி. ஸ்ரீரங்கத்தில் வைணவ குலத்தில் பிறந்து இருந்தாலும் வாலியின் கவிதை புலமையும், கற்பனை திறனும் அவரை எழுத்துலகில் ‘மார்க்கண்டேயக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார். சிறுவயதிலேயே இலக்கியம் மீதும், ஓவியம் மீதும் ஆர்வம் கொண்ட வாலிக்கு 1958ம் ஆண்டு திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டு வெளிவந்த ‘அழகர் மலைக்கள்ளன்’ படத்தில் சுசீல பாடிய ’நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா’ என தனது முதல் வரிகளை பதிவு செய்தார். அடுத்தடுத்து சினிமா உலகில் 15,000 க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதி ஜாம்பவனாக வலம் வந்தார்.
”தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்க்கிறேன்”
என எம்ஜிஆர்- கே.ஆர். விஜயா நடித்த பணம் படைத்தவர் படத்தில் காதலனை பிரிவும் காதலி தனது உயிரே நீங்கி செல்வதை போல் உணர்வை வாலியால் மட்டுமே இப்ப வரிகளில் உணர்த்த முடியும்.
மரணித்த மனைவியை மறக்க முடியாமல் தவிக்கும் கணவனுக்கு, அந்த மனைவியின் ஆன்மா வந்து ஆறுதல் கூறினால் எப்படி இருக்கும் என்பதை கற்பகம் படத்தில், “மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா.....” என வாலி கூறியிருப்பார். ஆதிக்கவர்க்க தாழ்த்தப்பட்ட ஏழை சாதிகளை அடக்கி ஆள்வதை எதிர்த்தால் என்ன ஆகும் என்பதை எம்ஜிஆர் மூலம் ”நான் ஆணையிட்டால்....” பாடல் வரிகளால் வாலியால் மட்டுமே மிரட்ட முடிந்தது. நண்பனின் பாசம் எதற்கும் ஈடாகாது என்பதை “முஸ்தபா முஸ்தபா” பாடல் வரிகள் கூறும்.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் அம்மா இல்லாமல் உயிர்ப்பிக்காது. அந்த அம்மாவின் பாசத்தை ”அம்மா என்றழைக்காத உயிரில்லையா, தாயில்லாமல் நானில்லை, நானாக நானில்லை தாயே. சின்னத்தாயவள் தந்த ராசாவே, ஆசைப்பட்ட எல்லாதையும் காசிருந்தா வாங்கலாம், காலையில் தினமும் கண்விழித்தால்” பாடல்கள் மூலம் கண்முன் காட்டி இருப்பார் வாலி.
உலகில் பூமி சுழல காதலும் ஒரு காரணம் என காதலுக்கே தனி அதிகாரம் படைக்கும் காதலர்களுக்காகவே, “தொட்டால் பூ மலரும், மல்லிகை என் மன்னன் மயங்கும், மாலையில் சந்தித்தேன், வைகாசி நிலவே, மலையோரம் வீசும் காற்று, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, நிலவே வா, செல்லாதே வா, முன்பே வா என் அன்பே வா, என்ன விலை அழகே” பாடல் வரிகள் மூலம் காதலுக்கு தனி இலக்கணமே படைத்திருப்பார்.
”தரைமேல் பிறக்க வைத்தார், கொடுத்ததெல்லாம் கொடுத்தார், கண்போன போக்கிலே கால் போகலாமா” பாடல் வரிகள் மூலம் வாழ்க்கைக்கான எதார்த்த தத்துவங்களை தனது வரிகளில் காட்டி பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிய வைத்தவர் தான் வாலி. ”ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம், துள்ளுவதோ இளமை” பாடல் வரிகளால் ஒவ்வொரு இளைஞரின் மனதையும் துள்ள விட்டார்.
இப்படி நண்பன், காதல், தாய்பாசம், தத்துவம் என அனைத்து விதமான உணர்வுகளையும் தனது பேனா நுனியில் நிறுத்திய வாலி 2013ம் ஆண்டு இதே நாளில் நுரையீரல் தொற்று காரணமாக விண்ணுலகை அடைந்தார். கற்பனையில் கவிதை படைப்பவனாக மட்டு இல்லாமல், ஓவியக்கவிஞனாகவும், நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமில்லாதவனாகவும் இருந்த வாலி சந்தரகாந்த், எதையும் தாங்கும் இதயம், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், காவல் காரன், ஒலி விளக்கு, குடியிருந்த கோயில், அடிமைப்பெண், இருகோடுகள், நீரும் நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன், பாரத விலாஸ், நினைத்தனை முடிப்பவன், அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை, வாழ்வே மாயம், அடுத்த வாரிசு, தங்க மகன், பாயும் புலி, தாய் வீடு, தர்மத்தின் தலைவர், ஊர்காவலன், நான் சிவப்பு மனிதன், படிக்காதவன், நல்லவனுக்கு நல்லன், மௌன ராகம், கிழக்கு வாசல், ராஜ நடை, இந்தியன், காதலர் தினம், ஹேராம், பிரியமானவளே, கஜினி, உழைப்பாளி, சந்திரமுகி, தேவர் மகன், காதலன், எஜமான், சிவாஜி, சென்னை 600028, தசாவரதாரம் நாடோடிகள், ஆதவன், கோவா, அயன், மங்காத்தா, எதிர்நீச்சல் படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.
எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி - கமல், விஜய்- அஜித், தனுஷ் - சிம்பு என அடுத்தடுத்த தலைமுறை ஹீரோக்களுக்கு பாடல் எழுதிய ஒரே கவிஞர் வாலி தான்.
“எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்.
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்.”
இது கண்ணதாசன் மறைவுக்கு வாலி எழுதிய இரங்கல் குறிப்பு. இன்று அவரது வரிகள் அவருக்கே இரங்கல் தெரிவிப்பதாக உள்ளது.