Vijayakanth: 'விஜயகாந்த் சாரோட நல்ல மனசு’ .. நெகிழ்ந்த கவிஞர் சினேகன்.. வைரலாகும் பழைய வீடியோ..!
நடிகர் விஜயகாந்தின் அடையாளமாக மாறிப்போன “தமிழன் தமிழன்” பாடல் உருவான கதையை இங்கு காணலாம்.
நடிகர் விஜயகாந்தின் அடையாளமாக மாறிப்போன “தமிழன் தமிழன்” பாடல் உருவான கதையை இங்கு காணலாம்.
கடந்த 2002 ஆம் ஆண்டு மனோஜ் குமார் இயக்கத்தில் விஜயகாந்த் , திலீப் , ஷமிதா ஷெட்டி , பிரியங்கா திரிவேதி, திலிப், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘ராஜ்ஜியம்’. பரத்வாஜ் இசையமைத்த இப்படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. அதேசமயம் பாடல்கள், காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திலும் விஜயகாந்த் ரகசிய பாதுகாப்பு ஏஜெண்டாக நடித்திருப்பார்.இப்படம் ₹ 7 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் சிநேகன் எழுதியிருந்தார். அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கதை உள்ளது.
பாண்டவர் பூமி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அவர், இந்த படத்தில் பாடல் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனை விஜயகாந்த் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் சினேகன் தெரிவித்திருந்தார். அவர் தனது உரையில், “ராஜ்ஜியம் என்று ஒரு படம் வந்தது. அதில் எல்லா பாட்டும் நான் எழுதி இருந்தேன். ஒரு பாடலை மட்டும் கவிஞர் வாலி எழுதட்டும் என இயக்குநர் மனோஜ்குமார் என்னிடம் சொன்னார். அதுதான் படத்தின் முதல் பாடலாகவும் இருந்தது.
ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது விஜயகாந்த், இயக்குநர் மனோஜ் குமாரிடம், ‘ஆமா நீங்க எல்லா பாட்டும் சினேகன் கிட்ட தானே கொடுத்தீங்க.. ஆனால் ஏன் ஒரு பாட்டு மட்டும் வாலி கிட்ட கொடுத்தீங்க?’ என கேட்டுள்ளார். கேட்டதன் விளைவு மறுநாளே விமானத்தில் டிக்கெட் போட்டு என்னை ஹைதராபாத்துக்கு வரவழைத்தார்கள்.
View this post on Instagram
என்னை பார்த்ததும் விஜயகாந்த், நீங்கள் முதலில் போய் சாப்பிடுங்க. மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம், எனக்கு எல்லாம் தெரியும் என சொன்னார். அதன்பிறகு தான் நான் அந்த பாடலில், ‘கோட்டை முதல் குமரி வரை கட்டு ஒரு மாலை.. ஏழைகளின் தோழன் போடு இவன் மேல.. தமிழன் தமிழன் இவன் தான் தமிழன்.. தலைவன் தலைவன் இவன் தான் தலைவன்’ என எழுதினேன். அதைக்கேட்டு என்னுடைய ஆயுட்காலம் வரை இந்த வரிகள் கேட்டுக் கொண்டே இருக்கும் என சொன்னார். விஜயகாந்த் சொன்னது போல இந்த பாடல் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது.